திருமலை: திருப்பதி நடைபாதையில் பக்தர்களை அச்சுறுத்திய 4வது சிறுத்தை கூண்டில் சிக்கியது. அதை வனத்துறையினர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சிறுத்தையின் முடி, நகம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி நடைபாதையில் செல்லும் பக்தர்களை கடந்த சில மாதங்களில் சிறுத்தைகள் அச்சுறுத்தி வருகிறது. இம்மாத துவக்கத்தில் 6 வயது சிறுமி லட்ஷிதாவை சிறுத்தை கவ்விச் சென்று கொன்றது. வனத்துறை வைத்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு கைத்தடி வழங்கவும் தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை பக்தர்களை அச்சுறுத்தி வந்த 4வது சிறுத்தையும் நடைபாதையில் 7வது மைல் அருகே கூண்டில் சிக்கியது. சிறுமியை கொன்றது எது என்பதை கண்டறிய, சிக்கிய அனைத்து சிறுத்தைகளுக்கும் அதன் நகம், ரத்தம், முடி ஆகியவை சேகரித்து மரபணு சோதனை செய்யப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4வது சிறுத்தை பிடிப்பட்டு இருந்தாலும் ‘ஆபரேஷன் சிறுத்தை’ திட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.