பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்து, உத்தரவிட்டுள்ளது. கடந்த 1952 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியலில் இத்திட்டத்தின் கீழ் சிறப்பு திருத்தங்கள் நடந்தாலும், கடந்த 21 ஆண்டுகளாக இம்முறைப்படி, வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தேர்தல் ஆணையம் திடீரென எடுத்துள்ள இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இல்லையென்றால், உங்களது குடியுரிமையையும், அரசு மானியத்திற்கான உரிமையையும் இழப்பீர்கள்’’ என எதிர்கட்சி தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடந்த 2024 மக்களவை தேர்தலில், சரண் தொகுதியில் பா.ஜ சார்பில் போட்டியிட்ட ராஜீவ் பிரதாப் ரூடி அப்போதே தேர்தல் பொறுப்பாளர்களிடம், ‘2019 தேர்தலைவிட உங்கள் வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகளை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
ஏனென்றால், இந்த தேர்தலுக்கு முன்பு நமக்கு எதிராக 80,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். என குறிப்பிட்டு பேசியிருந்தார். நேபாளம், வங்காளம், வங்கதேசத்தை எல்லையாக கொண்ட சிறுபான்மை மக்கள் ஆதிக்கம் செலுத்தும் சீமாஞ்சல் பகுதியில், 2024 மக்களவை தேர்தலில் நான்கு இடங்களில் மூன்றை பா.ஜ.க தலைமையிலான கூட்டணி இழந்தது. அதனால், ஆளும் பாஜ அரசு, நாட்டுக்குள் பிற நாட்டினரின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும், அவர்களாலேயே மூன்று இடங்களை இழந்தது எனவும் பா.ஜ தலைவர்கள் பேசியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வாக்காளர்களை நீக்குவதற்கே இது வழிவகுக்கும் என்று எதிர்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். “வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல. இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்திருக்க வேண்டிய ஒரு சாதாரண செயல்முறை. ஆனால், இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு பிறகு இது நடப்பதுதான் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது\\\\\\\\” என பீகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சுதிர் ராகேஷ் பேசியுள்ளார்.
பீகார் தவிர, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர்களை நீக்க சதித்திட்டம் நடக்கிறது என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாக உள்ளது. ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையத்தால் மக்களுக்கு விடுக்கப்படும் பெரும் சவால் இந்த திருத்தம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அரசு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று அடையாள அட்டை மற்றும் குடியிருப்பு ஆவணங்களை சரிபார்ப்பதால், அவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் பெரும் அபாயம் உள்ளது. இந்த பேராபத்தை தடுத்து நிறுத்த மக்கள் ஓரணியில் திரள வேண்டும்.