Wednesday, February 28, 2024
Home » அசாதாரண முயற்சி

அசாதாரண முயற்சி

by Karthik Yash

உத்தரகாண்ட் மாநிலம், சில்க்யாரா – பர்கோட் இடையே நடந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியது.சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணி அவ்வளவு எளிதானதல்ல. கடுங்குளிர், மழை என பல்வேறு இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டும். எத்தனை முயற்சிகள்? பொக்லைன் இயந்திரம் மூலம் பாறை துகள்களை அள்ளி எடுத்தல், ராட்சத இயந்திரங்கள் மூலம் துளையிடுதல் என பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து தோல்வியை தழுவின. ஆகர் இயந்திரம் துளையிட்ட 47 மீட்டரே ஒரு சிறு நம்பிக்கையை மீட்புக்குழுவின் மத்தியில் ஏற்படுத்தியது. பின்னர் எலி வளை தொழிலாளர்கள் தங்கள் வேலையை காட்டினர். 21 மணி நேரத்தில் 13 மீட்டர் அளவில் சுரங்கம் தோண்டுவது, மனித உழைப்புக்கு எல்லாம் அப்பாற்பட்டது.

இயந்திரங்கள் துணையுடன் நடந்த மிகப்பெரிய மனித உழைப்பின் விளைவாக, சுமார் 400 மணி நேரம், அசாதாரண சூழலில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 41 தொழிலாளர்களையும் எந்தவித பாதிப்புமின்றி மீட்ட பெருமைக்கு முக்கிய சொந்தக்காரர், மீட்புப் பணியின் மூளையாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ். இவர்தான் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவர். சுரங்கம், ஆழ்துளை, நிலத்தடி நீர் கட்டுமானங்கள், அது தொடர்பான ஆபத்துகள், தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதில் இவர் கில்லாடி. உலகில் தலைசிறந்த நிலத்தடி சுரங்கப்பாதை நிபுணர்களுள் ஒருவர். இப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததுமே, நவம்பர் 20ம் தேதியே, மீட்பு பணிக்காக டிக்ஸ் அழைக்கப்பட்டார்.

அழைத்தபோது அவர் கூறிய வார்த்தைகள் கவனிக்கத்தக்கவை… ‘‘இது விரைவாக நடக்கும்; பணிகள் எளிதாக முடியுமா என கூற இயலாது. பணிகள் இன்றா, நாளையா… எப்போது முடிவடையுமென கூற முடியாது. ஆனால், மிகவும் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள். கிறிஸ்துமஸ் தினத்திற்குள் வீட்டில் இருப்பார்கள்’’ என அவர் கூறிய வார்த்தைகளே பலருக்கும் ஆறுதல் அளித்தது. மீட்பு பணியின் உச்சக்கட்டத்தில் அவர், பிரார்த்தனை செய்த படம் வைரலாகி வருகிறது. கிறிஸ்தவரான அர்னால்ட் டிக்ஸ், இந்து கடவுள்கள் முன் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமென பிரார்த்தனையில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை தந்துள்ளது. மதத்தை விட மனிதம் முக்கியமானது என்பதை வலியுறுத்தும்விதமாக இது இருந்ததாக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இவருக்கு பக்கபலமாக செயல்பட்டு ஒன்றிய, மாநில அரசுக்கு தகவல்களை அனுப்பியது, மீட்பு பணிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் கைர்வால், தொழில்நுட்ப குழுவுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கிய சுரங்கத்துறை நிபுணர் கிறிஸ் கபூர், லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் ஆகியோர் மற்றும் மீட்புக்குழுவினரின் கடின உழைப்பும் பாராட்டிற்குரியவை. மீட்கப்பட்டதோடு பணிகள் முடிவடைந்து விடவில்லை. 17 நாட்களாக இருண்ட சூழலில் வாழ்ந்தவர்களின் மனநிலை, உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இவர்களை உயர் மருத்துவக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட காலம் வரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுப்பதற்கான வழிமுறைகள், நிகழ்ந்தாலும் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆராய வேண்டும். சுரங்கப்பணிக்காக முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்துவதும் மிகவும் அவசியம்.

You may also like

Leave a Comment

nineteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi