சென்னை: தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சிபிசிஐடி இந்த வழக்கிலி சிறப்பான விசாரணை நடத்தியுள்ளது. குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனாலை விற்பனை செய்தவர்கள், அவற்றை வாங்கி சாராயம் தயாரிக்க பயன்படுத்தியவர்கள் என சங்கிலி தொடராக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை என்று தெரிவித்து விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விஷ சாராயம் அருந்தி மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுசம்பந்தமாக மருத்துவமனை சார்பில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களையோ, எத்தனை பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தனியார் மருத்துவமனையில் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறித்த விவரங்களையோ வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான கூடுதல் கண்காணிப்பாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை. சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், எந்த அடிப்படையில் அவரது சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மற்ற அதிகாரிகளின் சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து செய்யப்பட்டதா என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மற்ற அதிகாரிகளை பொறுத்தவரை அரசின் விளக்கத்தைப்கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர் பட்டியலினத்தவர்களாக இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிற சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் தான் இந்த சட்டம் பொருந்தும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், முதலில் இருவர் பலியான போது, கள்ளச்சாராயம் காரணமல்ல என்று எந்த அடிப்படையில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்?. விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்று அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் காவல் துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.