துரைப்பாக்கம்: கண்ணகிநகரில் பெட்டிக்கடைக்காரரை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது தடுக்கிவிழுந்து காயமடைந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. சென்னை அடுத்த கண்ணகிநகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (46). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 2 பேர், மாமூல் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும், அலெக்ஸை சரமாரி தாக்கிவிட்டு கல்லா பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு தப்பினர்.
இதுகுறித்து கண்ணகிநகர் காவல்நிலையத்தில் அலெக்ஸ் புகார் அளித்தார். போலீசார் அதே பகுதியை சேர்ந்த அருண் (26), நவீன் (19) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் திருவான்மியூரில் தூய்மை பணியாளர் டில்லிபாபுவை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து 25 நாட்களுக்குமுன்புதான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. டில்லிபாபுவின் தாயையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓடியபோது தடுக்கிவிழுந்ததில் இருவரும் காய மடைந்தனர். இதனால் இருவரையும் போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் மாவு கட்டுபோடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.