Saturday, March 15, 2025
Home » மூல நோய்க்கான வெளிப்புற சிகிச்சை முறைகள்!

மூல நோய்க்கான வெளிப்புற சிகிச்சை முறைகள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

எனிமா சிகிச்சை

மலச்சிக்கல் ஆரம்பநிலையில் உள்ளவர்கள், வயிறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு எனிமா பயன்படுத்தலாம். எனிமா எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்தால் எடுக்கலாம். அல்லது அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு இருக்கிறது. அங்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று எனிமா எடுத்துக் கொள்ளும் முறைப் பற்றி கேட்டால், கற்றுத் தருவார்கள். அதன்பின், மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது மலச்சிக்கல் எந்தளவில் இருக்கிறதோ அதற்கு தகுந்தவாறு சுயமாகவே எனிமா எடுத்துக் கொள்ளலாம். எனிமா எடுத்துக் கொள்ளும் முறை தெரியாதவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எடுத்துக் கொள்ளவேண்டும்.

இடுப்புக் குளியல்

பெரியவர்கள் அமரும் வகையில் உள்ள குளியல் டப் தற்போது கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிக்கொண்டு, அதில் பாதியளவு வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்ப, அதில் தினசரி பத்து நிமிடம் அமர்ந்திருப்பது நல்லது.ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை எடுத்து கொதிக்க வைத்து, அதனை வெது வெதுப்பான தண்ணீருடன் கலந்து கொள்ளலாம் அல்லது திரிபலாப் பொடியை வாங்கி வந்து அதனை 2 தேக்கரண்டி அளவு கலந்து அந்த நீரில் அமரலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.அதுவே, சீழ் வடிதல், ரத்தம் வடிதல் அல்லது சதை வெளியே வந்து வலியால் அவதிப்படுபவர்கள் வேப்பிலை கொதிக்க வைத்த நீர் மற்றும் திரிபலா பொடி இரண்டையும் சேர்த்து கலந்து அந்த நீரில் தினசரி 10 நிமிடம் அமர்ந்திருப்பது நல்ல பலனைத் தரும்.

ஐஸ் பேக்

ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு துணியில் சுற்றி, அதனைக் கொண்டு, தினசரி 2 அல்லது 3 முறை ஒத்தடம் கொடுக்கலாம்.

எண்ணெய் மசாஜ்

டீ ட்ரீ ஆயில் எனும் எண்ணெய் கடைகளில் கிடைக்கிறது. இந்த எண்ணெயை ஒரு தேக்கரண்டி, ஆலுவேரா ஜெல் 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இவை அனைத்தையும் நன்கு கலந்துகொண்டு, இடுப்புக் குளியல் எடுத்த பின்போ அல்லது ஐஸ் பேக் எடுத்த பின்போ, அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்துவிட்டு, இந்த எண்ணெயை காலை மாலை இருவேளை தடவி வரலாம்.

டீ ட்ரீ எண்ணெய் கிடைக்கவில்லை என்பவர்கள், சுத்தமான தேங்காய் எண்ணெயை டீ ட்ரீ எண்ணெய்க்கு பதில் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் வீட்டிலேயே தயார் செய்து கொண்டால் இன்னும் நல்லது. கருஞ்சீரக எண்ணெய் 1 தேக்கரண்டி, ஆப்பிள் சிடர் வினிகர் 1 தேக்கரண்டி, லாவண்டர் ஆயில் 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி இவற்றை எடுத்து கலந்து வைத்துக் கொண்டால் இதனை இரண்டு நாள் வரை பயன்படுத்தலாம். வெளி மூலத்திற்கும் சரி, உள் மூலத்தினால், ஆசனவாய் சுற்றி ஏற்பட்டிருக்கும் கொப்புளங்கள், ரத்தம் வடிதல், எரிச்சல் போன்றவற்றிற்கு இந்த எண்ணெய் கலவை தடவி வர, விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பொதுவாக, மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது கழித்துவிடுங்கள். வேலை பளு காரணமாக, தள்ளிப் போடாதீர்கள். இதுபோன்று தொடர்ந்து செய்வதுதான் மூல நோய்க்கு ஆரம்ப காரணமாகும்.

யோகா பயிற்சிகள்

யோகா பயிற்சிகள் பொதுவாக பலவித நோய்களுக்கு தீர்வுக் கொடுக்கக் கூடியது. அந்த வகையில், வயிற்று அஜீரணக் கோளாறுகளை தடுக்கக் கூடிய யோகாசனங்கள் நிறைய இருக்கிறது. குறிப்பாக, வஜ்ரா அசனம், பவனமுக்தாசனம், புஜங்காசனம் போன்ற பல வகை ஆசனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர, சூர்ய நமஸ்காரம் என்று சொல்லும் 12 வகையான ஆசனம் போன்றவை மூல நோய் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இது தவிர, அக்குப் பிரசர் மற்றும் அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகளும் கூட நல்ல பலன் தரும். ஆனால், இந்த ஆசனங்கள் எல்லாம் அதற்கான பயிற்றுனரிடம் முறையாக கற்றுக் கொண்ட பிறகே வீட்டில் செய்ய வேண்டும்.அரசு மருத்துவமனைகளில் இதற்கான பயிற்சிகள் இலவசமாகவே, வழங்கி வருகிறார்கள். அங்கு சென்று இந்த பயிற்சிகளை கற்றுக் கொண்டால் தினசரி அதிகளவு மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை முடிந்தளவு குறைத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

தொகுப்பு: தவநிதி

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi