சென்னை: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன. தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்றச் தடை சட்ட வழக்கில் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் நீதிபதி அல்லி முன்பு நேற்று ஆஜரானார். அவரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார்.