அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவாலாங்காடு ரயில் நிலைய பகுதியில் நேற்று காலை 6.20 மணியளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை- அரக்கோணம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் ரயில்கள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து, சிக்னலில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்தனர். சிக்னல் கோளாறை ஊழியர்கள் காலை 7.50 மணியளவில் சரி செய்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து மைசூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் 3 மின்சார ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சிக்கனல் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அனைத்து ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டது.