தொண்டி : தொண்டி அருகே 400 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை வாங்கி வந்த மீனவரை போலீசார் தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மீனவ கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் சில மீனவர்கள் வெடிபொருட்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தொண்டி அருகே புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் செந்தில் குமார், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், திரி மற்றும் வயர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு டூவீலரில் சென்றபோது, வெடிபொருட்கள் அடங்கிய பை சாலையில் தவறி விழுந்து சிதறியுள்ளது. மீண்டும் அதை எடுப்பதற்காக டூவீலரில் செந்தில்குமார் வந்தபோது, அப்பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த பையை எடுத்து சோதனை செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் செந்தில்குமார் அங்கிருந்து தப்பி சென்றார்.
போலீசார் பையை சோதனையிட்டதில் 400 ஜெலட்டின் குச்சிகள், அதற்கு பயன்படுத்தப்படும் 400 டெட்டனேட்டர் வெடிபொருட்கள், 2 கிலோ திரி மற்றும் மூன்று கிலோ வயர் உள்ளிட்டவைகள் இருந்தது. இதையடுத்து வெடிபொருட்களை அடங்கிய பையை பறிமுதல் செய்த போலீசார், எஸ்பி.பட்டிணம் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்தனர்.
விசாரணையில், வெடிபொருட்கள் அனைத்தும் கடலில் வெடிவைத்து மீன் பிடிக்க பயன்படுத்துவதற்காக வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை வாங்கி வந்த செந்தில்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
Explosives, including gelatin sticks, were seized near Thondi