புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டியை சேர்ந்தவர் வைரமணி. (52). பூங்குடி ஊராட்சியில் கிராமத்திற்கு வெளியே ஒரு ஏக்கர் பரப்பளவில் உரிமம் பெற்று வெடி தயாரிக்கும் பட்டறையை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இங்கு, நேற்று உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 7 பேர் வெடிப்பொருட்களை கொண்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆடி மாத காற்றின் வேகம் அதிகரிப்பால் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையின் அருகாமையில் சென்ற உயர் மின்னழுத்த கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அதிலிருந்து தீ பொறிகள் பறந்து வெடி தயாரிக்கும் பட்டறையில் பட்டது. அப்போது பயங்கர சத்தத்துடன் வெடி பொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டு, பட்டறை கட்டிடம் தரைமட்டமானது.
இந்த விபத்தில் வைரமணி, கோவில்பட்டியை சேர்ந்த குமார், திருமலை, வீரமுத்து, வெள்ளனுரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 5 பேர் உடல் முழுவதும் தீ காயங்களுடன் கிடந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேர் லேசான காயத்துடன் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் மற்றும் புதுக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அனைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.