செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ராட்டின கிணறு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புலிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் காஞ்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கேசவன் தலைமையில், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம், வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் கலால் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் கூடுதல் விலை, விலை பட்டியல் அறிவிப்பு, கண்காணிப்பு கேமரா குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அனுமதியின்றி பார் செயல்படுகிறதா? என விசாரணை செய்தனர் அனுமதிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
கூடுதல் விலைக்கு மது விற்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அங்கு இருந்தவர்களிடம் கூறினர். இதுகுறித்து, டாஸ்மாக் மேலாளர் கேசவன் கூறுகையில், ‘‘தமிழக அரசு நிர்ணயித்து விலையை விட மதுபானங்களுக்கு கூடுதல் விலை விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால், அதனை வாங்குபவர்கள் எந்த கடையில் அதிக விலை கேட்கிறார்களோ, அந்த கடையின் விவரங்களை குறுஞ்செய்தியாகவோ, தொலைபேசி மூலமாகவோ எங்களுக்கு தெரிவிக்கலாம் புகார் கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் அதிக விலைக்கு மது விற்கும் விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.’’ என்றார்.