இந்தியாவில் பயணங்கள் துரிதமாக்கப்படும் வேளையில், அதற்காக பொதுமக்கள் செலுத்தும் கட்டணங்களும் அதிகம். வாகனங்கள் வைத்திருப்போரை சுங்கச்சாவடிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றன. பெட்ரோல், டீசலுக்கு அவர்கள் செலவிடும் தொகையே அதிகமிருக்க, அதன் தொடர்ச்சியாக வெளியூர் பயணம் என்றால், சுங்கச் சாவடிகளுக்கும் பெரும்தொகையை இழக்க வேண்டியதுள்ளது. அதிலும் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்த்ததில் இருந்தே சுங்க கட்டண கொள்ளை பல இடங்களில் வழிப்பறி போல நடக்கிறது.
சுங்கம் வசூலிக்கும் உரிமத்தை தனியார் நிறுவனங்கள் 15 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக நீட்டித்து கொண்டுள்ளன. இதன் விளைவு பொதுமக்கள் நெடுஞ்சாலை பயணங்களின்போது சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அதிலும் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் சுங்க கட்டணம், வாகனம் வைத்திருப்போரை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கசாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரும் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளது. வாகனங்களின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு என்பது வாகனம் வைத்திருப்போரை மட்டுமின்றி, பெரும்பாலான சமயங்களில் பொதுமக்களையும் பாதிக்கிறது. கட்டண உயர்வை காரணம் காட்டி, அத்தியாவசிய பொருட்கள் விலை அடிக்கடி ஏற்றப்படுகிறது. இதனால் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை தானாகவே உயர்கிறது. சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் விலைவாசி உயர்வால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுங்க கட்டண கொள்ளை என்ற முறையில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மட்டும் குறி வைத்து சுரண்டப்படுகிறது.
சுங்க கட்டண வசூல் அடிப்படையில் இந்தியாவிலேயே 5வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுங்கசாவடிகள் மூலம் கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.3,817 கோடியும், 2023-24ம் ஆண்டில் ரூ.4,221 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கசாவடியில் அதிகபட்சமாக ரூ.269 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து சுங்கச்சாவடிகள் மூலம் கணிசமான வருவாய் கொண்டு செல்லப்படும் நிலையில், சாலைகள் பராமரிப்போ, பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளோ கிடைப்பதில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுங்கசாவடிகளில் ஒப்பந்த காலம் காலாவதியான நிலையிலும், நிறுவனங்கள் விடாப்பிடியாக கட்டண கொள்ளையை அரங்கேற்றி வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டரை நெருங்கும் நிலையில், இங்கு மட்டுமே 67 சுங்கசாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இதிலிருந்து தமிழகத்தை சுற்றி வளைத்து சுங்கசாவடிகளை ஒன்றிய அரசு அமைத்துள்ளது புலனாகும். மகாராஷ்டிரா, உ.பி போன்ற மாநிலங்களில் சுங்கசாவடிகள் குறைவு என்பதை வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளின் ஓட்டுநர்களே ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.
சுங்கசாவடிகளில் செயல்பாட்டில் உள்ள பாஸ்டேக் முறை, வரிவசூலின் மற்றொரு கொடுமை என்றே கூறவேண்டும். தேவையற்ற காத்திருப்பு, ஊழியர்களுடன் தகராறு, ஸ்கேனர் பிரச்னைகள் என பொதுமக்களின் பயணங்களை அவதிக்குள்ளாக்குவதில் சுங்கச்சாவடிகளுக்கு பெரும்பங்கு உள்ளது. ஒன்றியத்தை ஆளுவோர், தமிழகத்தை ஆண்ட சுங்கம் தவிர்த்த சோழ மன்னர்களையெல்லாம் வரும்காலங்களிலாவது படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.