*மருந்து இல்லையென கைவிரித்த ஆரம்ப சுகாதார நிலையம்
சுரண்டை : சுரண்டை நகராட்சியில் தெருநாய்களில் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இவை தெருக்கள், சாலைகளில் செல்லும் குழந்தைகளையும், வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி சென்று கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். நாய்கள் துரத்துவதால் பைக்கில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் சுரண்டை நகராட்சி 21வது வார்டு சொர்ணவிநாயகர் கோயில் தெருவில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அப்போது வெறிநாய் ஒன்று 7 வயது சிறுமியை கடித்ததால் அலறி துடித்தார். அங்கிருந்த பொதுமக்கள் நாயை விரட்ட முயன்றபோது சொர்ண விநாயகர் கோவில் தெரு, பத்திரப்பதிவு அலுவலகம், சுரண்டை நகராட்சி அலுவலகம் பகுதியைச் சேர்ந்த அருணாசலம்(63), பரிசில்பேகம்(76), நாகப்பா(43), அரவிந்த் (26) உட்பட பத்துக்கும் மேற்பட்டோரையும் கடித்ததில் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தெருநாயை அடித்து கொன்றனர்.
இதையடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றபோது மருந்து இல்லை என கூறியதாக தெரிகிறது. அப்போது பொதுமக்கள் திரண்டதால் தடுப்பூசி போட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுரண்டை நகராட்சியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனை பிடிக்க நகராட்சி, மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அழகுராஜ் கூறுகையில், ‘சுரண்டை பகுதியில் அடிக்கடி நாய்களால் விபத்து ஏற்பட்டு காயமடைந்து வருகின்றனர். தெருவில் செல்வோரை நாய் கடித்து குதறுகிறது. நாய்க்கடி மருந்து மாவட்ட தலைமை மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. தெருநாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிறது’ என்றார்.