* நமது சிறப்பு நிரு–பர் பாலாஜி, மும்பை.
சுங்கச்சாவடிகளில் அநியாய கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தமிழக எம்பிகள் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைத்தபோது, 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்திலேயே உறுதி அளித்திருந்தார். மக்கள் நலன், நாட்டு முன்னேற்றம் பற்றி முடிவு எடுக்க வேண்டிய நாடாளுமன்றத்தையே அரசியல் பிரசார மேடையாக்கி வரும் ஒன்றிய அரசு, சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் செயல்பட்டு வருகிறது. வர்த்தகம் செய்பவர்கள் லாபத்தை அதிகரிக்க பாடுபடுவது மாதிரி, எந்த வகையில் எல்லாம் கோடி கோடியாக லாபம் கிடைக்கும் என்பதில் மட்டுமே மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு லாபம் திரட்டுவது ஒருபுறம் இருக்க, சட்டவிரோதமாக கட்டண வசூல் வேட்டை நடத்தி மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் விஷயங்களிலும் பாஜ ஒரு போதும் அசருவதாக இல்லை.
இந்த அடுக்கடுக்கான மக்கள் விரோத போக்கையும், கொள்ளைகளையும் அரசு தணிக்கைகளே அம்பலப்படுத்தி வருகின்றன. அரசு அமைப்பான சிஏஜி மேற்கொள்ளும் தணிக்கையிலேயே, பாஜவின் பித்தலாட்டங்களை மறைக்க முடிவதில்லை என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். இந்த வரிசையில் சுங்கக் கட்டண வசூல் மோசடி குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. அதிலும், தமிழக சுங்கச்சாவடியிலேயே இப்படி ஒரு மோசடியை அத்துமீறி அரங்கேற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுங்கக் கட்டணம், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள வசதிகள் குறித்து சிஏஜி தணிக்கை செய்து சமீபத்தில் வெளியிட்டது.
அதுவும், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென்மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொண்ட ஆய்விலேயே, பாஜவின் கட்டண கொள்ளை அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெளியாகியுள்ளது. இந்த 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் விதிகளுக்குப் புறம்பாக ரூ.135.05 கோடி வசூலித்துள்ளதை கண்டு பிடித்துள்ளது. சிஏஜி தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளில், தமிழ்நாட்டில் பரனூர்(செங்கல்பட்டு) சுங்கச்சாவடியும் ஒன்று. இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதில் தாமதம் ஆனது.
இதுபோல், இரும்புலியூர் – வண்டலூர் மற்றும் வண்டலூர் கூடுவாஞ்சேரி ஆகியவற்றின் இரண்டாம் கட்ட பணிகளிலும் தாமதம் ஆனது. திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, 4 வழிச்சாலைகளானது 6 வழி அல்லது 8 வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தாம்பரம் மற்றும் திண்டிவனம் இடையே இரண்டு இடங்களில் 4 வழிச் சாலையை 8 வழிச் சாலையாக ஆக்கும் பணிகள் நடந்தும், சுங்கக்கட்டணத்தைக் குறைக்காமல் முழுமையான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்துள்ளது. இவ்வாறு, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் வரை மட்டும் கூடுதல் கட்டணமாக ரூ.6.54 வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்றே 1956ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற விதி உள்ள நிலையிலும், இதற்கு மாறாக மதுராந்தகம் அருகில் 1954ம் ஆண்டில் கட்டப்பட்ட பாலத்துக்கு கடந்த 2017 மற்றும் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் வாகனங்களிடம் இருந்து கட்டணமாக மொத்தம் ரூ.22 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் அதிகபட்சமாக ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இங்கு அடாவடியாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
சுங்கச்சாவடிகள் அனைத்தும் கொள்ளைச் சாவடிகளாகவே செயல்படுகின்றன என வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். காலாவதியான சுங்கச்சாவடிகளில் கூட கட்டணம் வசூல் செய்த பாஜ அரசின் செயல் பலரிடம் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடி கட்டண கொள்ளையை கண்டித்த தமிழக அரசு, காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றியது. இதுபோல், நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட்டு, தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது. இதனை கண்டித்தும் தமிழ்நாடு அரசு பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது.
காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக அரசு சார்பிலும், தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடமும் வலியுறுத்தினர். ஆனால், 60 கி.மீ.க்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளை 3 மாதத்தில் மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும் காலாவதியான சுங்கச்சாவடிகளில் பாஜ அரசு கட்டணம் வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுபோல், நகராட்சி, ஊராட்சி போன்ற ஊருக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தும் கூட, அதனை நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு அலட்சியம் காட்டி வருகிறது என கனரக வாகன உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோல் ஆந்திர மாநிலம் ரணஸ்தலம் முதல் அனந்தபுரம் வரையிலான பகுதி சாலை மேம்பாட்டு பணி தாமதமானபோதும் சட்ட விதிகளை மீறி ரூ.48.23 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கேவனகெரே முதல் ஹவேரி வரையிலான சாலை மேம்பாட்டு பணி தாமதம் ஆகியும் சாலகெரி சுங்கச்சாவடியில் ரூ.40.26 கோடி, டோசித்தவனஹள்ளி முதல் ஹடாடி வரையிலான சாலை மேம்பாடு நிறைவடையாத நிலையிலும் ரூ.35.69 கோடி என, சட்ட விரோதமாக ரூ.124.18 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
பொது மக்கள் பணத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் விஐபி அல்லது சலுகை பெற்று கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், தனியார் பணத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் விஐபி வாகனங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உதாரணமாக, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல் 2020 செப்டம்பர் வரை 49,77, 901 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. அவற்றில் கட்டணம் கட்டாத வி.ஐ.பி வாகனங்கள் 12.60 சதவீதம் மட்டுமே.
இதுபோல், கணியூர் சுங்கச்சாவடியில் 11.12 சதவீதம், வேலன் செட்டியூர் சுங்கச்சாவடியில் 7.13 சதவீதம். பாளையம் சுங்கச்சாவடியில் 6.93 சதவீதம். வைகுண்டம் சுங்கச்சாவடியில் 6.76 சதவீதம். கொடை ரோடு சுங்கச்சாவடியில் 6.06 சதவீதம் மட்டுமே கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்குப் பெற்ற விஐபி வாகனங்கள் கடந்து சென்றுள்ளன. பொது பணத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் சென்ற இலவச வாகனங்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், நேர்மாறாக உள்ளது. இவ்வாறு விதி முறைகளுக்கு மாறாகவும், சரியான கணக்குகள் இல்லாமலும் நடந்த குளவுறுபடிகளையும் ஊழல்களையும் சிஏஜி தோலுரித்துக் காட்டியுள்ளது.
* விஐபி வாகனம் சென்றதாக கணக்கு காட்டி ஊழல்
சிஏஜி அறிக்கை வெளியிட்ட தகவல்களில், மிகவும் கவன ஈர்ப்பு பெற்றது பரனூர் சுங்கச்சாவடி கட்டண வசூல் விவரம்தான். சுங்கச்சாவடிகள் பொதுப் பணத்தில் அமைக்கப்பட்டவை மற்றும் தனியார் பணத்தில் அமைக்கப்பட்டவை என இரண்டு வகைகள் உள்ளன. செங்கல்பட்டு – பரனூர் சுங்கச்சாவடி பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியாகும். இந்த சுங்கச்சாவடியை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 1,17,08,438 வாகனங்கள் கடந்து சென்றுள்ளன என சிஏஜி அறிக்கையில் தகவல் இடம் பெற்றுள்ளது.
இதில், 62,37,152 வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்ற விஐபி வாகனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மொத்த வாகனங்களில் 53.27 சதவீத வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடந்து சென்ற 88,92,868 வாகனங்களில் 32,39,836 வாகனங்கள் (36.43 சதவீதம்), 2020 ஜனவரி முதல் செப்டம்பர் வரை கப்பலூர் சுங்கச்சாவடியை கடந்து சென்ற 40,81,941 வாகனங்களில் 10,23,879 வாகனங்கள் ( 25.08 சதவீதம்), லெம்பலக்குடியில் 14,02,325 வாகனங்களில் 2,56,864 வாகனங்கள் (18.32சதவீதம்) கட்டணம் செலுத்தாத விஐபி வாகனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், அரசு நேரடியாக அல்லாமல் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் நிலையான கட்டணமாக அரசு பெற்றுக் கொள்ளவதால் அரசுக்கு இழப்பீடு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டாலும், வாகனங்கள் அடிப்படையில்தான் நிலையான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் சலுகை பெற்ற விஐபி வாகனங்கள் தவிர பிற வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப குறைவான பணம்தான் அரசுக்கு செல்லும். எனவே, விஐபி வாகனங்கள் சென்றதாக பொய்க்கணக்கு காட்டியும், பாஸ்டேக் இல்லாமல் பணமாக வசூலிக்கப்பட்டதை மறைத்தும் முறைகேடாக பணம் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பலரும் விமர்சிக்கின்றனர். அரசின் விளக்கத்தை ஏற்க சிஏஜியும் மறுத்து விட்டது.