புதுடெல்லி: டெல்லியில் 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் அதே தவறை செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இதுபோன்ற நிலையில், காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வழங்குவதை ஜூலை முதல் நிறுத்துமாறு கடந்த ஏப்ரலில் ஒன்றிய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 1ம் தேதி (நேற்று) முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்த வாகனங்களை கண்டறிவதற்காக, டெல்லி அரசு தேசிய தலைநகர் முழுவதும் கிட்டத்தட்ட 350 பெட்ரோல் பங்குகளில் ஆட்டோ மேட்டிக் நம்பர் பிளேட் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்துத் துறை டெல்லி காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவற்றின் பணியாளர்களை உள்ளடக்கிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனை தொடர்ந்து தெற்கு டெல்லியில் உள்ள பல்வேறு பெட்ரோல் பங்க்குகளில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் பல குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலானது. இதன் மூலம் 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்களில் போலீசார் குவிக்கப்பட் டுள்ளனர்.