புதுடெல்லி: கார்கில் ஆய்வுக் குழுவைப் போன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படுமா’ என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேள்வி எழுப்பி உள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சம்பவங்களைத் தொடர்ந்து, தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக, பல கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் தூதர்கள் அடங்கிய ஏழு நாடாளுமன்றக் குழுக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. இந்தக் குழுக்கள் கடந்த சில வாரங்களாக உலகின் பல்வேறு தலைநகரங்களுக்குப் பயணம் செய்து, இந்தியாவின் செய்தியைத் தெரிவித்தன.
இந்த பயணத்தை முடித்துத் திரும்பிய குழுவினரை, பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பஹல்காம் தாக்குதலுக்குப் பிந்தைய நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைச் சவால்கள் குறித்து, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் முழுமையான விவாதம் நடத்த பிரதமர் இப்போது ஒப்புக்கொள்வாரா? மேலும், சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான இந்தியாவின் எதிர்கால உத்திகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் நடத்துவாரா? கார்கில் ஆய்வுக் குழுவைப் போன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்படுமா’ என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.