வளசரவாக்கம், ஆக.30: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (29). இவர், தனது விலை உயர்ந்த பைக்கை, கடந்த 14ம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பழைய குற்றவாளி நிஷாந்த் (29) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டதும், இவர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.