பெரம்பலூர், நவ.4: கூடுதல் பஸ்நிறுத்தம், கூடுதல் கடைகள், நவீன கழிப்பறையுடன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.72 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகளை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் நகராட்சி அலுவலகக் கூட்ட மன்றத்தில் கடந்த செப். 29ம்தேதி நகராட்சித் தலைவர்(திமுக) அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற, பெரம்பலூர் நகராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய பேருந்து நிலைய பகுதியில் கூடுதல் பஸ் நிறுத்தம், கூடுதல் கடைகள், நவீன கழிப்பறைகள் ஆகியவற்றை ரூ 3.72 கோடி மதிப்பில் அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி நேற்று(3ம்தேதி) பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய பகுதியில் ரூ3.72 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ராமர், துணைத்தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு புதுபஸ்ஸ்டாண்டு விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சிக் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.