‘‘டாஸ்மாக்கில கல்லா கட்டுற பணம் எல்லாம் மாத, கொடி வசூல் என பறக்க ஊழியர்கள் புலம்பறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்துலேயேயும், அருவி மாவட்டத்துலேயும் ஏற்கனவே டாஸ்மாக்குல அதிகாரிங்க வழக்கமான வசூல்ல கொடிக்கட்டி பறக்காங்க.. அருவி மாவட்டத்துல ‘பெல்’ பெயர் கொண்ட ஒரு சேல்ஸ்மேனு, கடைகள்தோறும் மாத வசூல், கொடி வசூல்னு பணத்தை அள்ளிக்கொண்டு போயி அதிகாரிகள் முன்னாடி கொட்டிக்கிட்டு இருக்காராம்.. இதுபோக யாராவது டிரான்ஸ்பர்னு கேட்டா லட்சங்களில்தான் டீலே நடக்குதாம்..
பாவப்பட்ட ஊழியர்கள் அதிகாரிகள நேரடியா சந்திச்சி டிரான்ஸ்பர் கேட்டா, பெல்ல பாத்தீங்களான்னும் பல்ல காட்றாங்களாம்.. இது பத்தாதுன்னு தலைநகர்ல இருந்து சிறப்பு மண்டல பறக்கும்படைன்னு சொல்லிக்கிட்டு ஒரு டீம்னு வேற நல்லா கல்லா கட்டுதாம்.. அட அதுவும் அதிகாரி வந்து கேட்டாக்கூட பரவாயில்ல.. அதிகாரி பேர சொல்லிக்கிட்டு ‘குமரமான’ ஒரு ஓட்டுநர் பணத்த வாரி குவிக்கிறாராம்.. நல்லா வருமானம் வரக்கூடிய கடைகள தேடிப்போய், பறக்கும் படை பெயர சொல்லிக்கிட்டு ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் தொடங்கி, 25 ஆயிரம் வரை பறந்து பறந்து பணத்தை வசூலிச்சிட்டு புன்சிரிப்போடே போறாராம்..
கப்பம் கட்டின டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாம் முதுநிலை மண்டல மேலாளர சந்திச்சி ‘எங்க நிலம இப்படி ஆயிடுச்சி’ன்னு புலம்பிட்டு வந்தாங்களாம்.. நாய் வித்த காசு மட்டுமில்ல, குவாட்டர் வித்த காசும் குரைக்காதுன்னு டாஸ்மாக்காரங்க தத்துவம் பேசிட்டு திரியுதாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கட்சி நிர்வாகிகள் எல்லாம் மாற்றுக்கட்சியில் இணையப்போறதா பரவும் தகவலால் கடும் அப்செட்டில் இருக்கிறாராமே குக்கர் தலைமையானவர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சியில் உள்ள முதல்கட்ட, 2வது கட்ட நிர்வாகிகள் தலைமையானவர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வர்றாங்களாம்.. சட்டசபை தேர்தலுக்கு பின்னர் கட்சியில் நமக்கு தேவையானவற்றை தலைமையானவர் செய்து கொடுப்பார்னு கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் நம்பிக்கையில் இருந்து வருகிறார்களாம்.. கட்சியில் பணத்தை இழந்து வருவது மிச்சம். பலமுறை தலைமையிட கவனத்துக்கு கொண்டு சென்றும் இதுவரை நிர்வாகிகளை பற்றி கண்டு கொள்ள வில்லையாம்…
இனியும் தலைமையானவர் செய்வாரு என்ற நம்பிக்கையும் போயிடுச்சி.. தலைமையானவரை நம்பி இருந்தா இனி நடுத்தெருவுக்கு தான் வரவேண்டியது இருக்கும்.. இதனால் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் மாற்றுக்கட்சிக்கு தாவிவிடலாம்னு அவர்களுக்குள் தீவிர ஆலோசனை நடத்தினாங்களாம்… இதற்காக நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் அவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருது.. இந்த தகவலை தலைமையிடத்துக்கு மூத்த நிர்வாகிகள் கொண்டு சென்றாங்களாம்..
இதனால் குக்கர் தலைமையானவர் கடும் அப்செட்டில் இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோடிகளில் புரளும் தண்ணீர் அதிகாரி ஒருத்தர் டிரான்ஸ்பருக்கே 55 லகரம் கொடுத்திருக்காராமே..’’ என பெருமூச்சுவிட்டபடியே கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்தில் பொதுப்பணியில் தண்ணீரை கவனிக்கும் உயர் அதிகாரி ஒருவர் கோடிகளில் புரண்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் பறந்தவண்ணம் இருக்காம்… இந்த அதிகாரி மஞ்சள் மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கும்போதே 55 லகரங்களை செலவு செய்துதான் வந்தாராம்..
செலவு செய்த லகரங்களை சம்பாதிக்க கான்ட்ராக்டர்களிடம் கறாராக கலெக்க்ஷன் செய்துவிடுகிறாராம்.. சமீபத்தில் கான்ட்ராக்டர் ஒருவரிடமிருந்து கமிஷனாக 40 லகரம் கைமாறியிருக்கு.. இந்த சமாச்சாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைச்சதும் உடனடியாக ஸ்பாட்டிற்கு போயிருக்கிறாங்க.. ஆனால், அந்த அதிகாரி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. இந்த அதிகாரியின் சொத்து மதிப்பு, சமீப காலமாக பல கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம்.. பினாமி பெயரில் நிறைய சொத்து வாங்கி குவித்துள்ளாராம்.. குறிப்பாக, கோபி, சங்ககிரி பகுதியில் சொத்துகளை மலைபோல் குவித்திருக்கிறாராம்..
சமீபத்தில் வாங்கப்பட்ட விவசாய நிலத்திற்கு தனது செல்வாக்கை பயன்படுத்தி காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்துள்ளதோடு, அந்த நிலத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள பென்சிங் செலவு மட்டும் ரூ.1 கோடியை எகிறுமாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரகசிய போராட்ட வியூகத்தால ஆடிப்போய் இருக்கிறதாமே பிசிஎஸ் தரப்பு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் 2 அதிகாரிகளை கண்டித்து அவர்களது வீட்டை சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் முற்றுகையிட்ட நிலையில், 30க்கும் மேற்பட்டோரை காவல்துறை பாதியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறமா விடுவிச்சாங்க..
இதனால் விரக்தியடைந்த பிசிஎஸ் அதிகாரிங்க தரப்பு, எப்படி வீட்டை முற்றுகையிட வரலாம்னு வீராப்பு காட்டி முதல்வரான புல்லட்சாமியின் வீட்டில் திரண்டாங்களாம்.. அப்போது புல்லட்சாமியும் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தாராம்.. இதனால் காவல்துறையின் நடவடிக்கை சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் மீது விரைவில் இருக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஆனா, அதிகாரிகளுக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த சமூக அமைப்புகள் ரகசிய வியூகம் வகுத்து வருவதாக தகவல் கசிந்துக்கிட்டு இருக்கு..
அத்துடன் அதிகாரிகள் என்றால் முதன்மை மக்கள் சேவகர் என்பதை மறந்துவிட்டு, புல்லட்சாமி வீட்டில் அனுமதி பெறாமல் திரண்ட அதிகாரிகள் மீதும் வழக்குபதிய வேண்டுமென்ற புதிய கோஷத்தையும் முன்னெடுத்துள்ளார்களாம்.. மேலும் ஒவ்வொரு அதிகாரியின் மைனஸ் பட்டியல் சேகரிக்கப்படுவதால் ஆடிப்போய் இருக்கிறதாம் பிசிஎஸ் தரப்பு.. இதுதான் தற்போதைய புதுச்சேரி ஹைலெட்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.