சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெற குடும்ப தலைவிகளுக்கென பிரத்யேக ஏ.டி.எம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும்ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இத்திட்டம் தொடர்பாக அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்தவகையில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது மகளிர் உரிமைத் தொகை செப்.15ம் தேதி முதல் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக நிதித்துறை தரப்பிலும்,ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. அதனடிப்படையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன. மேலும், இதற்கான விண்ணப்பங்களை முறையாக பதிவு செய்யும் முகாம்களும் நடத்தப்பட்டன. இதில் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 1.63 கோடி குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். அந்தவகையில் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளனர்.
இந்த உரிமைத் தொகையை பெற வங்கி கணக்குகள் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், வங்கி கணக்கு இல்லாதவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் அவர்களின் கணக்குகளை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டன. இந்நிலையில், குடும்ப தலைவிகள் இந்த தொகையை பெற பிரத்யேக ஏ.டி.எம் கார்டு (ரூபே கார்டு) தயாராகி வருகிறது. இந்த கார்டுகளை ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப தலைவிகள் பெற்று பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் தொடங்கி வைத்த பின்னர், குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில்ரூ.1000 செலுத்தப்படும். இதனையடுத்து, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் மூலம் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட குடும்ப தலைவிகள் அவர்களின் பகுதிகளில் உள்ள ஆர்.டி.ஓ.,விடம் சென்று முறையிட்டு நிவாரணத்தை தேடிக்கொள்ள வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வரின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான இறுதி ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடக்கத்தக்கது.