நியூயார்க்: அதிபர் டிரம்புடனான மோதலுக்குப் பிறகு, புதிய அரசியல் கட்சியை உருவாக்கி இருப்பதாக அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் எலான் மஸ்க். டிரம்ப் 2வது முறையாக அதிபரானதும் அரசின் செலவின குறைப்பு துறை தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார். ஆனால் டிரம்ப் கொண்டு வந்த வரிச் சலுகை மற்றும் செலவு குறைப்பு மசோதாவை மஸ்க் எதிர்த்தார். இதனால் கருத்து வேறுபாட்டால் டிரம்ப் தனக்கு கொடுத்த பதவியை ராஜினாமா செய்த மஸ்க், டிரம்புடன் சமூக ஊடகத்தில் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டார்.
இந்த சூழலில் புதிய கட்சி தொடங்க சமீபத்தில் கருத்துக்கணிப்பு நடத்திய மஸ்க், தற்போது ‘அமெரிக்கா கட்சி’ எனும் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் நேற்று அறிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ‘‘அமெரிக்கர்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை திரும்ப வழங்குவதற்காக அமெரிக்கா கட்சி உருவாக்கப்பட்டுள்ளது’’ என கூறி உள்ளார். ஆனால் அமெரிக்க தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி தொடர்பாக எந்த பதிவும் மேற்கொள்ளப்படவில்லை என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.