சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மிகவும் முக்கியமான தேர்வு குரூப் 1 தேர்வு. டிஎன்பிஎஸ்சி முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு பட்டியலை வெளியிட்டு, அந்த பட்டியல் அடிப்படையில் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு குறித்து கடந்த நவம்பர் மாதத்திலே ஆண்டு கால அட்டவணை வெளியிட்டோம். அதில் 7 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு, அந்த தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்தி கொண்டிருக்கிறோம்.
அதன்படி குரூப் 1 தேர்வு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 ஆயிரத்து 277 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஏறக்குறைய 12,230 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது. குரூப் 1 தேர்வை பொறுத்தவரை எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த முறை விதிமுறைகள் எல்லாம் எளிதாக்கி மாணவர்கள் எளிதாக தங்கள் விடையை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
பழைய முறையில் விடையில் ஏ, பி, சி, டி.,யில் எவ்வளவு என்று மொத்தமாக போட சொல்லியிருந்தேம். அதற்காக கூடுதலாக 15 நிமிடம் ஆனது. இப்போது அதற்கு பதிலாக அவர்கள் எவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் விட்டு இருக்கிறார்கள் என்று கேட்டு இருக்கிறோம். இதனால், இதை அவர்கள் குறித்த காலத்திற்குள் முடிக்க முடியும். கடந்த 6 மாதம் காலமாக தேர்வு திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறோம். எளிமைப்படுத்தியிருக்கிறோம். முன்னர் எல்லாம் டிஎன்பிஎஸ்சியில் 95 தேர்வுகள் நடக்கும். இப்போது அதை எல்லாம் ஒருங்கிணைத்துள்ளோம்.
தற்போது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு, ஒருங்கிணைந்த டிப்ளமோ தேர்வு என்று ஒன்றாக சேர்த்து விட்டோம். இதனால், இப்போது 7 தேர்வுகளை தான் நடத்துகிறோம். இதனால், மாணவர்கள் தேர்வுக்கு ஒரே விண்ணப்பம் போட்டால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.