*மருத்துவர்,செவிலியர், பணியாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
தஞ்சாவூர் : ‘தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும்’ என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பச்சிளம் குழந்தைகள் அவசர சிறப்பு சிகிச்சை பிரிவில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார். புதிய ‘ஏசி’ வசதிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
கட்டிடத்தில் ஏதேனும் சிறு பழுதுகள் இருப்பின் உடனடியாக சரி செய்ய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதை உடனடியாக பணியாளர்களைக் கொண்டு அகற்ற வேண்டும். மின்தடை ஏற்படாமல் இருக்க மின்சார பிரிவு அலுவலர்கள் பணியில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் பணியாற்றுகிற மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணியில் இருக்க வேண்டும், தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிகிச்சைக்கு வருகிற பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.
மேலும், தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனை மாநிலத்திலேயே சிறந்த சிகிச்சை வழங்குகின்ற சேவை புரிகிற மருத்துவமனை ஆகும். எனவே மருத்துவமனையின் பெருமையை போற்றுகிற வகையில் மருத்துவர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் உள்ள துணை சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனைகளிலும் எந்த நேரமும் ஆய்வுகள் மேற்கொள்வேன். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
மேலும், தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனை தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்த மருத்துவமனை 40 ஏக்கர் பரப்பளவை கொண்டது. தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் நடைபெறும் மருத்துவமனைகளுள் இந்த மருத்துவமனையும் ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.இந்த மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிரசவத்திற்காக வருவர்.
இதையடுத்து, தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது. வழக்கமாக இங்கு ஒரு நாளைக்கு 30 முதல் அதிகபட்சமாக 40 குழந்தைகள் வரை இங்கு பிறக்கிறது. மாதத்திற்கு 1,000 முதல் 1,500 குழந்தைகள் வரை பிறக்கிறது.
மகளிர் மருத்துவம், குழந்தைகள் நலம், குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, கண் மருத்துவம், பல் மருத்துவம் போன்ற சிகிச்சைகள் செயல்பட்டு வருகிறுது. மகளிர் மருத்துவத்திலும், கண்புரை அறுவை சிகிச்சையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.