சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த 12, 19, 20, 21 தேதிகளில் கணினி வழித் தேர்வாக நடந்தது. 12ம் தேதி முற்பகல் நடந்த தாள் 1க்கான (தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள்) உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன் மீது முறையீடு செய்ய ஆகஸ்ட் 30ம் தேதி (நேற்று) வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. முறையீடு செய்வதில் தேர்வர்களுக்கு தொழில்நுட்ப இடையூறு ஏற்பட்டதாக அறியப்பட்டதால் இந்த தேர்வுத்தாளின் உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்டம்பர் 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.