கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நா.த.க., முன்னாள் நிர்வாகி சிவராமன் மீது மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. சிவராமன் தன்னை வழக்கறிஞர் என அடையாளப்படுத்திக் கொண்டு நில பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி 7 பேரிடம் இருந்து 36 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
போலியாக நீதிமன்ற உத்தரவை தயார் செய்தும், நீதிமன்றத்தின் பெயரில் வங்கியில் கணக்கு இருப்பது போல் போலி ரசீது தயார் செய்தும் 36.20 லட்சம் மோசடியாக வசூலித்தது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உரிய ஆதாரங்களுடன் எஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவராமன் ஏற்கனவே என்சிசி பயிற்சியாளர் என போலியாக முகாம் நடத்திய நிலையில் தற்போது தன்னை வழக்கறிஞர்கள் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.