Wednesday, June 18, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் தனி மனிதர் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்!

தனி மனிதர் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முன்வர வேண்டும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகளாவிய சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. புவியின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதில் ஏற்பட்டுள்ள மாசுபாடுகளை சரி செய்யவும் பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒவ்வொரு நாளும் அதற்காக செயல்பட்டு வருகின்றனர். திட மற்றும் திரவக் கழிவுகளை மேலாண்மை செய்வது போலவே காய்கறிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் போன்ற ஈரக்கழிவுகளை மேலாண்மை செய்து அவற்றை ஊட்டச்சத்துமிக்க உரமாக மாற்றி வருகின்றார் க்ளீன் குன்னூர் அமைப்பின் நிர்வாகி சமந்தா அயனா.

“குன்னூர் ஒரு சுற்றுலாப்பகுதியாக இருப்பதால், இங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். குறிப்பாக கால்வாய்கள், ஆறுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்திருப்பதை பார்க்கலாம். ஆரம்பத்தில் சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் பலருடன் இணைந்து குன்னூர் பகுதியில் குழாய் வடிவ கால்வாய்கள், ஆறுகள் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டேன். அதில் சேகரிக்கப்படும் கழிவுகளை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று சிந்தித்த போது, குன்னூர் நகராட்சி ஓட்டுபட்டறை குப்பைக் கிடங்கு பற்றி தெரியவந்தது.

சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் இடமாகவே இந்தக் கிடங்கு இருந்தது. நாங்க சேகரித்த குப்பைகளை அங்கு கொட்டிய போது, அந்த இடமே குப்பையால் அழுகிய வாடை ஏற்பட்டதால், நறுமண மலர்கள், செடிகள் அங்கு வைத்து ஒரு தோட்டம் அமைத்தோம். குப்பைக் கிடங்கு வாசம் வீசும் பூவனமாக காட்சியளித்தது. இருப்பினும் குப்பைகள் கொட்டும் இடமாகவே அது இருந்ததால் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது’’ என்றவர் அதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளார்.

‘‘குன்னூர் நகராட்சியுடன் இணைந்து கழிவு மேலாண்மையில் ஈடுபட ஆரம்பித்தோம். இங்கு வரும் கழிவுகள் பெரும்பாலும் 85% பிரிக்கப்பட்டுதான் கொண்டுவரப்படுகின்றன. அதிலிருந்து நாங்க பிளாஸ்டிக், உலோகம், காகிதங்களை தனியாக பிரித்தெடுத்து, பிளாஸ்டிக்கினை மறுசுழற்சி செய்யக்கூடியவை, செய்யமுடியாதவை என பிரித்து மறுசுழற்சி செய்வதை மட்டும் அதற்கான இடங்களுக்கு அனுப்பிவிடுவோம். மறுசுழற்சி செய்யமுடியாத கழிவுகளை கம்ப்ரெஸ் செய்து சிமென்ட் தொழிற்சாலைகளில் எரிபொருள் பயன்பாட்டிற்கு அனுப்பப்படும். திடக்கழிவுகளை போலவே ஈரக்கழிவுகளும் வீடுகளிலிருந்தும் மார்க்கெட்டுகளிலிருந்தும் சேகரிக்கப்படுகிறது. காய்கறி, இறைச்சி, மீன் போன்ற ஈரக்கழிவுகள் இயந்திரங்களில் உலர்த்தி நேரடியாக உரமாக தயாரிக்கப்படுகிறது.

இது முற்றிலும் இயற்கையான உரம். வேறெந்த பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் தயாரிக்கப்படும் உரம் சோதனை செய்யப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு அனுப்பப்படும். இறைச்சி கழிவுகளும் இந்த உரத்தில் கலந்திருப்பதால் நைட்ரஜன் ஊட்டச்சத்து அதில் நிறைந்திருக்கும். அதை பயன்படுத்துவதால் தாவரங்கள் செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கழிவு மேலாண்மையில் உட்படுத்தப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வண்ணம் ஏதோ ஒரு உபயோகமான பொருளாகத்தான் வெளியே செல்கிறது. நான் இதில் ஈடுபடத்தொடங்கியதும், நகராட்சி கழிவுகள் சேகரிக்கப்படுவதிலும், அவற்றை முறையாக பிரித்தெடுத்து கிடங்கிற்கு கொண்டுவந்து சேர்ப்பதிலும் நிறைய மாற்றங்களை செய்தனர்” என்றவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சந்திக்கும் சவால்களையும் பகிர்ந்தார்.

“குன்னூர் ஒரு சுற்றுலாப்பகுதி என்பதால் பிளாஸ்டிக் போன்ற குப்பைகள் சேருவதும், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதும் தவிர்க்க முடியாத நிலையாகவே இருந்து வருகிறது. இருப்பினும் நகராட்சியின் நடவடிக்கைகளால் சில வகையான பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்டு மாசுபாடு குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகள், பொது இடங்களில் குப்பைகள் கொட்டக் கூடாது போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. கொரோனா காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. உணவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் ஆர்டர்கள் அனைத்தும் பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் கவர்களில்தான் பேக்கிங் செய்யப்படுகிறது.

பேக் செய்வதற்கே நிறைய பிளாஸ்டிக் கவர்கள் நிறைய அடுக்குகளாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் தேவையில்லாத பிளாஸ்டிக் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதால், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரிக்கிறது. புவிக்கு கேடு விளைவிக்கும் குப்பைகளை கழிவு மேலாண்மைக்கு உட்படுத்தப்படும் போது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அதிகப்படியான குப்பைகளை உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பெரும்பாலான மக்களுக்கு விழிப்புணர்வும் இருப்பதில்லை. குப்பைகளை நாம் எங்கோ கொட்டுகிறோம் அல்லது யாரோ வந்து குப்பைகளை சேகரித்து செல்கிறார்கள்.

ஆனால் அதன் பின்னர் அவை என்னவாகின்றன என்பதையெல்லாம் சிந்திப்பதேயில்லை. குழந்தைகளுக்கும் தேவையில்லாத குப்பைகளை உருவாக்கக்கூடாது என்கிற பழக்கத்தை கற்றுத்தர வேண்டும். குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்கள் சாக்லேட், பிஸ்கெட் போன்ற ஸ்நாக்ஸ் கவர்களை வாகனங்களில் செல்லும் போது எதுவும் யோசிக்காமல் அப்படியே தூக்கி எறிந்துவிடுவார்கள். சின்ன பிளாஸ்டிக் குப்பைகள் அளவில் சிறியதென்றாலும் பாதிப்புகள் பெரிது. ஏனெனில் அவற்றை சேகரிப்பதே கடினம். எனவே சுலபமாக நீர்நிலைகளில் கலந்து அப்படியே சென்றுவிடும்” என்றவரை தொடர்ந்தார் க்ளீன் குன்னூர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வசந்தன்.

“மறுசுழற்சி செய்யக்கூடிய, செய்யமுடியாத கழிவுகளை மேலாண்மை செய்வதன் மூலம் மீண்டும் அவற்றை உபயோகமான ஏதோவொன்றாக மாற்றலாம். எதுவும் செய்யமுடியாத கழிவுகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதலின் படி அப்புறப்படுத்திவிடுகிறோம். கழிவுகளை அப்படியே விட்டுவிடாமல் அதனை மேலாண்மை செய்வதால் அதிகப்படியான கார்பன் உமிழ்வு தடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கிற மாசுபாடு சற்றே குறைக்கப்படுகிறது. எனினும், முற்றிலுமாக இல்லை.

ஏனெனில் கழிவு மேலாண்மை செய்கிறோம் என்பதை விட கழிவுகளை உருவாக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவசியம். மேலாண்மை செய்து கொள்ளலாம் என்கிற யோசனையில் தேவையில்லாத அதிகப்படியான கழிவுகளை உருவாக்குவது அர்த்தமில்லாத ஒன்று. எங்களின் நோக்கமும் அதுவாகத்தான் உள்ளது. எனவே கழிவுகள் உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். க்ளீன் குன்னூர் அமைப்பின் மூலம் மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அடுத்த தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கழிவு மேலாண்மை குறித்து தெரிந்து கொள்ளவும் பள்ளி மாணவர்களை நேரடியாக இங்கு வரவழைத்து கழிவு மேலாண்மையின் ஒவ்வொரு செயல்முறைகளையும் பார்வையிட செய்கிறோம்.

குப்பைகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, திடக்கழிவுகளை எவ்வாறு மேலாண்மை செய்கிறோம், ஈர்க்கழிவுகளை எவ்வாறு உபயோகமுள்ள உரமாக மாற்று
கிறோம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்கின்றனர். ஒவ்வொரு வகையான கழிவுகளையும் எவ்வாறு அப்புறப்படுத்துகிறோம், ஏன் செய்கிறோம் என்பதை குறித்து கேள்வி கேட்கின்றனர். இவ்வாறு என்ன நடக்கிறது என்பதை நேரடியாக அவர்களுக்கு காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது சில மாற்றங்கள் ஏற்படலாம் என்பதே இதன் நோக்கம். மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர் தேங்கப்படுவதாலும் குப்பைகள் அடித்துச் செல்லப்படுகின்றன. எனவே அவற்றை சரி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்” என்றவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.

“சுற்றுச்சூழலை பாதுகாக்க அன்றாடம் வெளியேற்றப்படும் கழிவுகளை குறைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஷாம்பூவினை சாஷே பாக்கெட்டுகளாக வாங்குவதற்கு பதில் ஒரு பாட்டில் வாங்கலாம். ஒரு பாட்டிலை எளிதாக அப்புறப்படுத்திடலாம். சின்னச் சின்ன சாஷேக்களை அவ்வாறு செய்ய முடியாது. இதனால் மைக்ரோபிளாஸ்டிக்குகள் அதிகம் உருவாகும். மனிதர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. கூடவே பிளாஸ்டிக் பயன்பாடுகளும். குறிப்பாக ஆர்டர் செய்யப்படும் உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் தருகிறார்கள். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் மாற்றம் கொண்டு வந்தால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்’’ என்றார் வசந்தன்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi