சென்னை : தமிழகத்தில் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சியின் மூலம் நோய் பரவல் ஏற்படும் அபாயம் இருந்தால் அதனை ரத்து செய்ய சுகாதாரத் துறை அறிவுறுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநாடு, கட்சி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனர். எனவே சுகாதாரத் துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை: மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்து, அங்கு சுகாதாரம் பேணிக்காக்கப்படுகிறதா? கழிவறை முறையாக உள்ளதா? உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
குடிநீர் முறையாக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள உணவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குப்பைகளை மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பணியாளர்கள் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். பிறகு அந்த இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். மேலும் நிகழ்ச்சியால் ஏதேனும் நோய் பரவல் ஏற்படும் அபாயம் இருந்தால் அதனை ரத்து அல்லது வேறு தேதிக்கு மாற்றியமைக்க அறிவுறுத்த வேண்டும். நிகழ்ச்சி நடத்தும் அனைவரும் சுகாதாரத் துறையுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.