இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த விக்கெட் கீப்பர் ரிஷப்பண்ட், தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மன்களுக்கான தரவரிசை பட்டியலில் 801 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் தரவரிசை ரேட்டிங்கில் 800 புள்ளிகளை கடந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இப்பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோரூட் 889 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஹாரி புரூக், 874 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். கேன்வில்லியம்சன் 3ம் இடத்தையும், இந்திய தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் 851 புள்ளிகளுடன் 4வது இடத்தையும், ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதேபோன்று ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 5வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் ஜடேஜா இருக்கிறார். ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் பும்ரா, 2வது இடத்தில் ரபாடா (தென் ஆப்பிரிக்கா) 3வது இடத்தில் கம்மின்ஸ்சும் (ஆஸ்திரேலியா) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.