*இறப்பிலும் கூட இணை பிரியாத தம்பதி
பரமக்குடி : பரமக்குடி அருகே மனைவி இறந்த சோகத்தில், அவரின் உடல் மீது கணவர் சாய்ந்து உயிரை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பார்த்திபனூர் சூசையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டி (86), மனைவி அமராவதி (82). இவர்களுக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். தம்பதி ஊரில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். உடல் நலக்குறைவால் அமராவதி கடந்த 24ம் தேதி இரவு உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் இரவு முழுவதும் கேசவப்பாண்டி அழுதபடி சோகமாக இருந்தார்.
நேற்று முன்தினம் காலை மனைவியின் உடல் அருகே சென்று அழுதவர், மயங்கி அவர் மீது விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி பார்த்தபோது, உயிரிழந்த நிலையில் இருந்தார்.
மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. மண வாழ்வுக்கு பின் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி, இறப்பிலும் இணைபிரியாத நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது. தம்பதி ஊர் மயானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.