புதுடெல்லி: ஒருவார கால ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி நேற்று தொடங்கினார். இதில் பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே ஆகிய 4 நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார். பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, நார்வே ஆகிய 4 ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று புறப்பட்டு சென்றார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சுக்கு இன்று செல்லும் அவர் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்குள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்கிறார்.
அடுத்த நாள் இந்திய தொழிலதிபர்களை சந்திக்கும் ராகுல், அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்கிறார். 9ம் தேதி அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து, சயின்ஸ் போ பல்கலையில் மாணவர்களுடன் உரையாடுகிறார். 10ம் தேதி நெதர்லாந்து செல்லும் ராகுல் அங்கு 400 ஆண்டுகள் பழமையான லைடன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடுகிறார்.
11ம் தேதி நார்வே செல்லும் அவர் ஓஸ்லோவில் அந்நாட்டு எம்பிக்கள் மற்றும் இந்திய வம்சாவளிகளை சந்தித்து பேசுகிறார். அத்துடன், ஓஸ்லோ பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுடன் உரையாடுகிறார். பின்னர் 12ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்.