Saturday, June 14, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு உணவுக் குழாய் புற்று நோய்…

உணவுக் குழாய் புற்று நோய்…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

உஷார் ப்ளீஸ்!

மூத்த புற்றுநோய் நிபுணர்

இந்தியாவில் மெதுவாக பரவி வரும் அமைதியான அச்சுறுத்தல் என்றால் அது ஈசோஃபேஜியல் புற்றுநோய் (Esophageal Cancer) எனப்படும் உணவுக் குழாய் புற்றுநோய்தான். பொதுவாக, இந்தியாவில் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான பேச்சு அதிகரித்து வரும் நிலையில், நுரையீரல் மற்றும் வயிற்றுப்புற்று போன்ற பொதுவாக அறியப்பட்ட வகைகள் மட்டுமே கவனத்தில் உள்ளன. ஆனால், உடலின் உணவுக்குழாயான ஈசோஃபேகசை தாக்கும் புற்றுநோயான ஈசோஃபேஜியல் புற்றுநோய், தற்போது மிகுந்த எண்ணிக்கையுடன் காணப்படுகிறது.

இந்தியாவில் ஒட்டுமொத்த புற்றுநோய் நோயாளிகளில் சுமார் 6% பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது உணவுக்குழாயின் செயல்பாட்டையே பாதிப்பதால், முன்னெச்சரிக்கையும் பொதுமக்கள் விழிப்புணர்வும் மிகவும் அவசியம்.

இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? யார் அதிக ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்?

ஈசோஃபேஜியல் புற்றுநோய் இரண்டு முக்கிய வகைகளில் வருகிறது:

1. ஸ்குவாமஸ் செல்கள் புற்றுநோய் (Squamous Cell Carcinoma):

இது ஈசோஃபேகசின் மேல்தளத் திசுக்களில் உருவாகும். இது பெரும்பாலும் புகையிலை, மதுபானம் போன்ற பழக்கங்களுடன் தொடர்புடையது.

2.அடினோ கார்சினோமா (Adenocarcinoma):

இது ஈசோஃபேகசின் கீழ்பகுதியில் உள்ள (glandular) செல்களில் உருவாகிறது. நெஞ்செரிச்சல், GERD, Barrett’s Esophagus போன்ற நிலைகள் இதற்குக் காரணமாய் கருதப்படுகின்றன.
மற்ற அபாயக் காரணிகள்:

*சூடான பானங்களை அதிகமாக உட்கொள்வது

*பழங்கள், காய்கறிகள் குறைவான உணவுப்பழக்கம்

*வயிற்றிலிருந்து உணவுக்குழாய்க்கு அமிலம் திரும்பப் பாயும் ஒரு நிலை ஆகும் (GERD)

*உடல் பருமன், மரபணு நோய்கள் (Tylosis, Plummer-Vinson Syndrome)

*மார்புப் பகுதியில் ஏற்கனவே மேற்கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை.

அறிகுறிகள் தாமதமாகவே தெரிகின்றன

நோய் ஆரம்பகட்டத்தில் எந்தவொரு அறிகுறியும் காட்டாததால், தாமதமாகக் கண்டறிவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால் நோய் வளரும்போது, பின்வரும் அறிகுறிகள் தெரிகின்றன.

*உணவு விழுங்குவதில் சிரமம்

*உடல் எடையிலும் சோர்வும்

*மார்பில் வலி அல்லது எரிச்சல்

*நீடித்த இருமல், குரல் மாற்றம்

*தொடர்ந்து வருகிற நெஞ்செரிச்சல் அல்லது செரிமானக் கோளாறு

இந்த அறிகுறிகள் சாதாரணமாக தோன்றலாம் என்றாலும், தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

நோயறிதலுக்கான முக்கிய பரிசோதனைகள்

*எண்டோஸ்கோபி – வாயின் வழியாக கேமராவுடன் கூடிய குழாய் செலுத்தி ஈசோஃபேகசின் உள்ளே பார்வையிடப்படும்.

*பயாப்ஸி – திசுக்களை எடுத்துப் புற்று செல்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.

*சி.டி. ஸ்கேன், பேட் ஸ்கேன், எம்.ஆர்.ஐ (CT, PET SCAN, MRI)போன்ற மேம்பட்ட ஸ்கேன்கள் பரவலை கண்டறியும்.

*பேரியம் எக்ஸ்ரே – X கதிர் மூலம் உணவுக்குழாயின் அமைப்பைக் காட்டுகிறது.

இவை எல்லாம் சேர்ந்து நோயின் அடிப்படை நிலையை (staging) உறுதி செய்து சிகிச்சைத் திட்டத்தை உருவாக்க உதவுகின்றன.

அறுவைசிகிச்சை

மிக ஆரம்ப கட்டத்தில் இருந்தால், கட்டியால் பாதிக்கப்பட்ட உணவுக்குழாய் பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். இன்று, ரோபோட்டிக் அறுவைசிகிச்சை தற்போது சிறந்த நவீன அறுவை முறையாகக் கருதப்படுகிறது.

இந்த முறையின் முக்கியத்துவம் துல்லியமான செயல்பாடு, குறைந்த இரத்த இழப்பு மற்றும் புற்றுநோய்களுக்கு எதிரான சிறந்த மருத்துவ முடிவுகள் ஆகியவையாகும். முக்கியமாக, மார்பு, வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சைகளில் இந்த நவீன தொழில்நுட்பம் சிறந்த பலன்களை வழங்குவதாக கருதப்படுகிறது.

கீமோதெரபி (Chemotherapy)

அறுவைசிகிச்சைக்கு முன் அல்லது பின்னர் வழங்கப்படும் கீமோதெரபி, பொதுவாக பிற சிகிச்சை முறைகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இதன் நோக்கம், கட்டிகளைச் சிறிதாக்குவதோடு மட்டுமல்லாமல், அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீதமுள்ள புற்று செல்களை முழுமையாக அழிக்க உதவுவதுமாகும்.

கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy)

அதிக ஆற்றலுள்ள கதிர்வீச்சு புற்று செல்களை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகிய இரண்டும் இணைந்து வழங்கப்படும் ‘கீமோ-ரேடியேஷன்’ (Chemo-Radiation) சிகிச்சை, முக்கியமாக அறுவைசிகிச்சைக்கு முன் (நியோஅட்ஜுவன்ட் சிகிச்சை) வழங்கப்படுகிறது. இது மேம்பட்ட கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு அல்லது அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலைகளில் வேதனை குறைக்கும் நோக்கில் பரிந்துரைக்கப்படுகிறது.புற்றுநோயின் ஆரம்ப கட்டத்திலும், அறுவைசிகிச்சைக்கு உட்பட முடியாத நிலைகளிலும், கதிர்வீச்சும் கீமோதெரபியும் சிகிச்சையாக பயன்படுத்தப்படுகின்றன.

குறிவைத்த சிகிச்சை (Targeted Therapy)

புற்று செல்கள் வளர்ச்சிக்கு காரணமான பாதைகளை தடுக்கும் நவீன மருந்துகள்.

நோயெதிர்ப்பு சிகிச்சை (Immuno therapy)

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டி புற்று செல்களை அழிக்க பயன்படுத்தப்படும் முறை. குறிப்பாக chemo-radiation மற்றும் அறுவையின் பின் மீதமுள்ள செல்களுக்கு இது
பரிந்துரைக்கப்படுகிறது.

சிகிச்சைக்குப் பின் – மீட்பு மற்றும் வாழ்க்கை மேலாண்மை

புற்றுநோயை வெல்லுதல் ஒரு சாதனை. ஆனால் அதற்குப் பிறகும் உடலியல், உணவியல், உளவியல் சவால்கள் தொடரும்:

*உணவை விழுங்குவதில் சிரமம், அமிலம் பின் வருதல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

*ஆரம்பத்தில், மென்மையான அல்லது திரவ வகை உணவுகள் அடங்கிய மாற்றப்பட்ட உணவுமுறை பரிந்துரைக்கப்படுகிறது.

*பேச்சு மற்றும் விழுங்கும் பயிற்சி சிகிச்சைகள் வழியாக இயல்பு செயல்பாடுகள் மீண்டும் மேம்படுத்தப்படுகின்றன.

*அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பகுதியில் , தொற்றுநோய் போன்ற சிக்கல்கள் உருவாகக் கூடும் என்பதால், தொடர்ந்த மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

மனநலமும் முக்கியம்

மீண்டுவரும் நோயாளிகளில் அழுத்தம், பயம், மனச்சோர்வு போன்ற உளவியல் தாக்கங்கள் ஏற்படலாம். இதை சமாளிக்க ஆதரவு குழுக்கள், உளவியல் ஆலோசனை மற்றும் குடும்பம் முக்கிய பங்காற்ற வேண்டும்.

முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வே வழிகாட்டி

ஈசோஃபேஜியல் புற்றுநோய் தற்போது இந்தியாவில் எளிதில் புறக்கணிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை என்பவை மிக அவசியமானவை. வாழ்க்கை தரத்தை பாதுகாக்க – அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம். ஆரம்பத்தில் கண்டறியுங்கள், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

தொகுப்பு: மகாதேவ் பொத்தராஜு

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi