நெல்லை : ஏர்வாடி திருவழுதீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பழமைவாய்ந்த திருவழுதீஸ்வரர்-பெரியநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தேரோட்ட திருவிழா நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு வைகாசி தேரோட்ட திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 9ம் திருநாளான நேற்று தேரோட்ட திருவிழா நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினர். அதன் பின் பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேர் இழுத்தனர். தேரோட்ட திருவிழாவில் ஏர்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மேலும் தேரோட்டத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தனர். மதியம் திருவழுதீஸ்வரர், பெரியநாயகி அம்பாள் திருக்கோயில் பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தஸ்லீமா அயூப்கான், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆசாத், ஏர்வாடி பேரூர் திமுக செயலாளர் அயூப்கான் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து நடத்தினர். நெல்லை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், ஏர்வாடி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் ஏர்வாடி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.