ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கும் அவர், ஈரோடு-சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் இருந்து மேட்டூர் வரை 11 கிலோ மீட்டர் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து நாளை மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதைத்தொடர்ந்து, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில், 4,533 பயனாளிகளுக்கு ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். தொடர்ந்து, மாவட்டத்தில் முடிவுற்ற அரசு வளர்ச்சி திட்டப்பணிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
இதைதொடர்ந்து சேலம் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு-சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் இருந்து மேட்டூர் வரை 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். இன்று இரவு மேட்டூர் சுற்றுலா பயணியர் மாளிகையில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர், சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவிற்கு செல்கிறார். அங்கு 1.01 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ரூ.1,500 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், புதிய திட்டப்பணிகளையும் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்திற்கான பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.