சென்னை: ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் ஈரோடு, சேலம், திருச்சி, நெல்லை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் உள்ள அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று காலை மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கல்வி நிறுவனத்தினர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
ஈரோடு, சென்னிமலை ரோட்டில் உள்ள சேனாபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் இ.மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. சேலம் ஏற்காடு அடிவார பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று காலை மாணவர்கள் பள்ளி பஸ்சிலும், ஆட்டோ மற்றும் காரிலும் வந்தனர். அப்போது நிர்வாகிகள், பள்ளிக்கு வந்துள்ள இ.மெயிலை சோதனை செய்தனர். அதில், பள்ளி வளாகத்தில் 5 பைப் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். இது பகல் நேரத்தில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனடியாக மாணவர்களை பள்ளிக்குள் விட வேண்டாம் என கூறியதுடன், அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். தகவலறிந்து கன்னங்குறிச்சி போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, 3 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதேபோல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மழலையர் பள்ளி உள்ளிட்ட 2 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்த கள்ளிக்குடியில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளருக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால், போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள அந்நிறுவனத்தின் பள்ளியில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.