கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு கடந்த ஒரு மாதத்தில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் ஒவ்வொரு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
அவர்கள் அருவிபோல் விழும் தண்ணீரில் குளித்தும், அணையின் கீழ் பகுதியில் கடற்கரை போன்ற மணற்பரப்பில் அமர்ந்து சுவையான மீன் மற்றும் உணவு வகைகளை சாப்பிட்டும், அணையின் மேல் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் பெண்களும், குழந்தைகளும் விளையாடியும் விடுமுறையை உற்சாகமாக களித்தும் செல்வார்கள். ஒரு நபருக்கு 5 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுவதாலும், மிகக்குறைந்த செலவில் விடுமுறையை கழிக்க முடியும் என்பதாலும் கோடை விடுமுறை நாட்களில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஏப்ரல், மே மாதத்தில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் கொடிவேரி அணைக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அணையில் குளித்தும், பூங்காவில் விளையாடியும் உற்சாகமாக விடுமுறையை களித்தனர்.