ஈரோடு: ஈரோடு கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கோட்டை பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20ம் தேதி பூச்சாட்டுதல் நடைபெற்றது. 21ம் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன் தினம் அக்னி சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
நேற்றிரவு பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக அக்னி குண்டம் பற்ற வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா இன்று காலை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாளை மறுநாள் (26ம் தேதி) மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.