Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோடு மக்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேச்சால் சிரிப்பலை

ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையமும், திருச்சியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமும் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் விகேஎஸ்.இளங்கோவன் நன்றி தெரிவித்து பேசுகையில், இந்திரா காந்தி சிலையை சென்னையில் அமைக்க போகிறோம் என அறிவித்த முதல்வருக்கு நன்றி. இந்த அறிவிப்பு மூலம் தனது உள்ளம் பெரியது. யாருக்கும் தான் பகைவன் அல்ல. எல்லோருக்கும் நல்லது செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என்பதை முதல்வர் சொல்லாமல் சொல்லியுள்ளார். ஓசூர் விமான நிலையத்தை பற்றி பேசிய போது பாமக எம்எல்ஏ அருள், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரினார். அது ஏற்றுக் கொள்ள கூடியது தான்.

ஆனால் சேலம் விமான நிலையம் 6 மாதம் இயங்கும், மீண்டும் மூடிவிடுவார்கள். காரணம் அங்கு நிறைய பயணிகளே வருவதில்லை. என்னை பொறுத்தவரை பயனுள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்றால் அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் நடுவில் வைக்க வேண்டும். இப்போது உள்ள விமான நிலையம் ஓமலூரில் தான் உள்ளது. சேலத்தில் இருந்து ஓமலூர் செல்லவே ஒரு மணி நேரம் ஆகும். இதனால் விமான நிலையத்தை நகர்த்தி சங்ககிரியில் வைத்தால், கொங்கு மண்டலத்தில் உள்ள பாதி பகுதி பயன் அடையும். ஈரோடு மக்களுக்கு சவுகரியமாக இருக்கும். இதை பாமக உறுப்பினர் அருளும் ஒரு பரந்த எண்ணத்தோடு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார். இளங்கோவனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கேட்டதும் கொடுக்கிற ஆட்சிதான் திமுக ஆட்சி: பாமக எம்எல்ஏவுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்

சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் நன்றாகப் பேசக்கூடியவர் தான். அவர் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் என்று மூன்று, நான்கு முறை மன்றாடிக் கொண்டே இருக்கிறார். இந்த ஆட்சி அந்த மாதிரி ஆட்சி அல்ல. இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், முதல்வரை பொறுத்தவரைக்கும் எல்லோரையும் சமமாக கருதிதான், எல்லா சட்டமன்ற தொகுதிக்கும், சட்டமன்ற உறுப்பனிர்களிடமிருந்து மனுக்களை பெற்று அதற்கு வேண்டிய பணிகளை எல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். நீங்கள் சொன்னாலே போதும். அதை குறித்து வைத்துக்கொண்டு, அதைச் செய்வதற்கு அமைச்சர்கள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள். நீங்கள் மன்றாட வேண்டாம். மன்றாடி, மன்றாடி என்ற வார்த்தை தேவையில்லை. நீங்கள் மன்றாட வேண்டிய அவசியமே இல்லை. கேட்டதும் கொடுக்கிற ஆட்சிதான் இந்த ஆட்சி என்றார்.