ஈரோடு: ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி பள்ளிக்கு உட்பட்ட மூலப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று காலை 9 மணி அளவில் பள்ளியின் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. இதை அடுத்து தகவலின் அடிப்படையில் பள்ளியின் முதல்வர் உடனடியாக மாவட்ட காவல் கணிக்கணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் எஸ்.பி ஜவகர் உத்தரவின் பேரில் உடனடியாக மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் மற்றும் டி.எஸ்.பி முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மூலம் பள்ளிக்கு விரைந்தனர். தொடர்ந்து பள்ளியில் வெடிகுண்டு பொருட்கள் உள்ளனவா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு முன்பாக இச்சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பள்ளியில் படிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்டனர்.
குறிப்பாக இச்சம்பவம் கடந்த 29ம் தேதி இதே காவல் நிலையத்திற்கு உட்பட்ட மற்றொரு பகுதியில் பிரபல தனியார் இன்டர்நேஷனல் பள்ளியிலும் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த 8 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வெடிகுண்டு இல்லை எனவும், இத் தகவல் வதந்தி என்றும் தெரியவந்தது.
இருப்பினும் இச்சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த வெடிகுண்டு தகவல் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து இச்சம்பவம் 2வது முறையாக ஈரோட்டில் நிகழ்ந்திருப்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.