Sunday, April 21, 2024
Home » ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனையில் ரூ.18.76 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனையில் ரூ.18.76 லட்சம் பறிமுதல்

by MuthuKumar

ஈரோடு: தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை ரூ.18.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கருங்கல்பாளையம், சத்திரோடு, சென்னிமலை ரோடு, நசியனூர் ரோடு மற்றும் காளை மாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கருங்கல்பாளையம் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்து 22 ஆயிரம், சத்திரோட்டில் சதீஷ்குமார் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்து 400, சென்னிமலை ரோட்டில் அலிகுஞ்சு சலீம் என்பவர் காரில் எடுத்து வந்த ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம், நசியனூர் ரோட்டில் அனூப் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ. 7 லட்சம், காளை மாட்டு சிலை பகுதியில் ஷாஜி என்பவர் காரில் எடுத்து வந்த ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதன்படி நேற்று முதல் இன்று அதிகாலை வரை வாகன சோதனையில் ரூ.18.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று அதிகாலை வரை, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில், தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்டதாக மொத்தம் ரூ. 63 லட்சத்து 77 ஆயிரத்து 597 பறிமுதல் செய்யப்பட்டது. அதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ. 43 லட்சத்து 71 ஆயிரத்து 197 உரிமையாளர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.20 லட்சத்து 6 ஆயிரத்து 400 மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

காங்கயத்தில் ரூ.82 ஆயிரம் பறிமுதல்:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கயம் பகுதியில் வெள்ளகோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி தலைமையிலான பறக்கும் படை குழுவினர், நேற்று இரவு காங்கயம்- கரூர் சாலை, முத்தூர் பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற காரை சோதனை செய்தபோது, காங்கயத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.82 ஆயிரத்து 300 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.82 ஆயிரத்து 300ஐ பறிமுதல் செய்து, காங்கயம் தாசில்தார் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi