Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோடு-பவானி-மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.80 கோடியில் 35 கி.மீ. ரோடு விரிவாக்க இறுதிகட்ட பணி தீவிரம்

பவானி : ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தொலைவுக்கு ஈரோடு மாவட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் விரிவாக்க திட்டத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலையான இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து வந்ததால், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச் 544 ஹெச்) என அறிவிக்கப்பட்டு, விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 7 மீட்டர் அகலமுள்ள இந்த ரோடு 10 மீட்டர் வரை கடினப் புருவங்களுடன் கூடிய ரோடாக அகலப்படுத்தப்பட்டு, இருவழி சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாட்டினம் மஹால் தொடங்கி குட்டமுனியப்பன் கோயில் வரையில் 15 கி.மீ. தொலைவுக்கு ரூ.38 கோடி மதிப்பில் ஒரு பகுதியாகவும், குட்டமுனியபபன் கோயிலிலிருந்து மேட்டூர் ரோட்டில் ஈரோடு மாவட்டத்தின் எல்லையான பெரும்பள்ளம் வரையில் 20.2 கி.மீ. தொலைவுக்கு ரூ.42 கோடி மதிப்பில் மற்றொரு பகுதியாகவும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, பவானி-மேட்டூர் வழித்தடத்தில் 940 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் தலா 1.50 மீட்டர் கடின புருவ சாலை மற்றும் தார் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கான்கிரீட் மழைநீர் வடிகால் மற்றும் அதற்கு மேலாக கான்கிரீட் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பவானி காலிங்கராயன்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் சாலையோரங்களில் கான்கிரீட் மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இதேபோல் பவானி நகராட்சி பகுதிகளில் அந்தியூர்-மேட்டூர் பிரிவில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இச்சாலை பணிகள் முடிவடைந்தால் வாகனப் போக்குவரத்து எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மாபேட்டையில் கட்டண சுங்கச்சாவடி

ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் வழித்தடத்தில் 85 கி.மீ தொலைவு தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, ரோடு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என தொப்பூர், அம்மாபேட்டை என இரு இடங்களில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்படுகிறது. அம்மாபேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க 104 மரங்கள் வெட்டி, அகலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது டோல்கேட் அலுவலக கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில், வாகனங்கள் சென்று வர தலா 3 வழித்தடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தால் பவானி-மேட்டூர் வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்திய பின்னரே செல்ல முடியும்.

சாலையோரத்தில் பேவர் பிளாக் கற்கள்

பவானி நகராட்சி பகுதியில் அந்தியூர் மேட்டூர் பிரிவு தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள 600 மீட்டர் தொலைவுக்கு ரோட்டின் இரு புறங்களிலும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்படுகிறது. தற்போது பேவர் பிளாக் கற்கள் பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு, ஜல்லிகள் கொட்டப்பட்டு, தரைத்தளம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், சாலையோர பகுதியில் பயணிகள், பொதுமக்கள் வாகன போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடந்து செல்வர்.