ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 3வது தங்ககத்தை வென்றுள்ளது.குதிரையேற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் குதிரையேற்ற போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஏறக்குறைய 10 மணி நேரம் நீடித்த இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யக்ரித் சிங் ஆகியோர் குழு 209.205 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றது.
1982ல் குதிரையேற்றபோட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அணி தங்கம் வென்ற நிலையில் அதை தொடர்ந்து 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பதக்கபட்டியலில் 3 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
குதிரையேற்றபோட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். “பல தசாப்தங்களுக்குப் பிறகு, எங்கள் குதிரையேற்ற அணியினர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மிகவும் பெருமைக்குரிய விஷயம்!
ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யக்ரித் சிங் ஆகியோர் இணையற்ற திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த வரலாற்றுச் சாதனைக்காக அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.