சென்னை: சமவேலைக்கு சமஊதியம் குறித்து இடைநிலை ஆசிரியர் வைத்த கோரிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட குழுவினருடன் 5 ஆசிரியர் சங்கங்கள் அரசுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், ஆகியோர் பங்கேற்றனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றின சார்பில் 5 சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த சங்கங்களை தவிர மற்ற சங்கங்களை சேர்ந்தவர்களுடன் மற்றொரு நாளில் பேச்சு வார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த பேச்சு வார்த்தையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்து ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கை குறித்து பேசப்பட்டது.
அதில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009க்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் அதற்கு முன் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் பெறுவது தொடர்பாக குழுவிடம் பேசப்பட்டது. சம ஊதியம் வழங்குவது தொடர்பாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர். குறிப்பாக 2006க்கு பிறகு பறிக்கப்பட்ட ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் குறித்தும், இடைநிலை ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, பிளஸ் 2 மற்றும் தொழில் கல்வி படித்தவர்களுக்காக நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியக்கட்டு, ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் இணக்கமான நிலை உருவாகியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மற்ற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சம ஊதியம் குறித்த பரிந்துரை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார்.