திருப்பூர்: அதிமுகவை குறைந்த விலைக்கு பாஜகவிடம் எடப்பாடி பழனிச்சாமி விற்று விட்டார் என திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் காட்டுவளவு ஆர்விஇ லேஅவுட்டில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: வட மாநிலங்களில் ராமனை வைத்து அரசியல் செய்தவர்கள், தமிழகத்தில் முருகனை துணைக்கு அழைத்துள்ளனர். பாஜவினர் தமிழ்நாட்டை திசை திருப்ப கேவலமான அரசியலை செய்கின்றனர். 11 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணத்திற்கு மட்டும் பிரதமர் 786 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஜிஎஸ்டி வரியை பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய முறையான கல்வி நிதி 2,250 கோடி ரூபாயை தர மறுக்கிறார்கள்.
முருகன் மாநாடு என்ற பெயரில் அண்ணா, பெரியாரை அவமதிக்கிறார்கள். இதனை அதிமுக வேடிக்கை பார்க்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை குறைந்த விலைக்கு பாஜகவிடம் விற்று விட்டார். நமது முதல்வர் பார்வையில் குற்றம் இருந்தால் களையப்படுகிறது. குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கிறார். ஒன்றிய அரசின் நெருக்கடிக்கு மத்தியிலும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், 7 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, பெண்களுக்கு விடியல் பயணம், உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களால் இந்தியாவில் தமிழகம் புதுமை பூமியாக திகழ்கிறது. 7வது முறையும் திமுக ஆட்சி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.