புதுடெல்லி: சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை மதிப்பீடு செய்து பரிந்துரை வழங்கும் நிபுணர்கள் குழுவின் அதானி நிறுவனத்தின் ஆலோசகர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்மின்சாரம் மற்றும் நதி பள்ளத்தாக்கு திட்டங்களுக்கான நிபுணர் மதிப்பீட்டுக் குழு கடந்த செப்டம்பர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் அரசு அமைப்புகளில் இல்லாத 7 உறுப்பினர்களில் ஒருவராக அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய ஆலோசகரான ஜனார்தன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிபுணர் குழுவின் முதல் கூட்டம் கடந்த அக்டோபர் 17, 18ம் தேதிகளில் நடந்துள்ளது. அதில், மகாராஷ்டிராவின் சதாராவில் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் 1,500 மெகாவாட் தரலி பம்பிங் ஸ்டோரேஜ் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இது அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் இவ்விவகாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டத்தில் ஜனார்தன் சவுத்ரி பங்கேற்கவில்லை எனவும், அவர் அதானி நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தாலும், முழு நேர ஊழியராக பணியாற்றவில்லை என்றும் கூறி உள்ளார். மேலும், நியமனத்திற்கு முன்பாக, அதானி நிறுவனத்தின் ஆலோசகராக தான் இருக்கும் தகவலை ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.
தேசிய நீர்மின் சக்தி நிறுவனத்தில் (என்எச்பிசி) 36 ஆண்டுகள் பணியாற்றிய ஜனார்தன் சவுத்ரி தொழில்நுட்ப பிரிவில் இயக்குநராக இருந்து கடந்த 2020 மார்ச்சில் ஓய்வு பெற்றார். அதன்பிறகு 2022 ஏப்ரலில் அதானி நிறுவன ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார். ஜனார்தன் இடம் பெற்றுள்ள நிபுணர் குழுதான் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை மதிப்பீடு செய்து, அவற்றின் தாக்கங்களை அளவிட்டு அரசுக்கு பரிந்துரை வழங்கும். இதில் அதானி நிறுவன ஆலோசகருக்கு பொறுப்பு தரப்பட்டுள்ளதற்கு எதிர்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* 6 திட்டங்களுக்கு ஒப்புதல்
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்தரா தனது டிவிட்டர் பதிவில், ‘‘மோடியின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அதானி நிறுவன ஊழியர் ஜனார்தனை நிபுணர் குழு உறுப்பினராக சேர்த்துள்ளது. இந்த குழுதான் அதானியின் 6 திட்டங்களை (10,300 மெகாவாட் மின் உற்பத்திக்கானது) மதிப்பீடு செய்ய உள்ளது’’ என கூறி உள்ளார். அதானி நிறுவன ஆலோசகர், எப்படி, ஏன் அரசின் நிபுணர் குழுவில் சேர்க்கப்பபட்டார் என சிவசேனா கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.