டெல்லி: சுற்றுச்சூழல் காரணங்களுக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்தது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்து வரும் உச்சநீதிமன்றமும், ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது. ஆனால் கொரோனா காலகட்டத்தில், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது.
அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஏற்கெனவே தமிழக அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ளபடி கழிவுகளை மட்டும் வேதாந்தா நிறுவனம் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும். அரசு அனுமதிக்காத வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமாக 25 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த 22 ஆண்டுகளாக வேதாந்தா நிறுவனம் சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி உள்ளது. அடிப்படையான விதிமுறைகளை கூட அந்நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது. எனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்பட அனுமதிக்க இயலாது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை அபாரதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளை ஸ்டெர்லை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.