இன்றைய தேதியில் சுற்றுச்சசூழல் பாதுகாப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகி விட்டது. நாம் இயக்கும் வாகனங்கள் கூட சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ணம் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கான பணிகளும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதற்காகவே சூரிய சக்தியை அடிப்படையாகக் கொண்ட சோலார் பவர் பம்புகளைப் பயன்படுத்தும் நடைமுறை விவசாயிகள் மத்தியில் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. மின்சாரம் அல்லது டீசல் பயன்பாட்டைத் தவிர்த்து, சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றி நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுத்தும் இந்த முறை பல பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்த சோலார் பம்புகள் மூன்று முக்கிய முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. முதன்மையாக நேரடி சோலார் பம்பிங் முறை. அதாவது சூரிய ஒளி கிடைக்கும் நேரங்களில் பேனல்களில் இருந்து நேரடியாக பம்பு இயங்கும் முறை. இதில் பேட்டரி தேவையில்லை என்பதால் பராமரிப்பு செலவுகள் குறைவாக இருக்கும். இரண்டாவது முறை பேட்டரி சார்ஜ் முறை. இந்த முறையில் சூரிய ஒளி கிடைக்கும்போது சக்தியை சேமித்து, மழை அல்லது இரவு நேரங்களில் கூட பம்பை இயக்க முடியும். இது தொடர்ந்து பாசனம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மூன்றாவது முறை ஹைப்ரிட் முறை. அதாவது சோலார் சக்தியுடனும், மின்சாரத்துடனும் இணைந்து செயல்படும் முறை. இது சூரிய ஒளி இல்லாத நேரங்களில் கூட நிலையான நீர் விநியோகத்திற்கு துணைபுரியும்.
சோலார் பம்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. முதலில் மின்சாரம் அல்லது டீசலுக்கான செலவுகளை முழுமையாகக் குறைக்கலாம். பசுமை சக்தியைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கலாம். மின்தடை போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நீர்ப்பாசனத்தை சீராக வழங்க முடியும். இவ்வளவு நன்மைகள் மிகுந்த சோலார் பம்புகளை நிறுவ தமிழக அரசும், ஒன்றிய அரசும் விவசாயிகளுக்கு மானிய உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் குறைந்த செலவில் இத்தொழில்நுட்பத்தை அனைத்து விவசாயிகளும் தங்களின் வயல்களில் பயன்படுத்த முடியும். சோலார் பம்புகளை நிறுவும் நடைமுறையும் மிகவும் எளிமையானது. சூரிய ஒளி அதிகம் உள்ள திறந்த இடத்தில் சோலார் பேனல்கள் பொருத்தப்படுகின்றன. பின்னர் அந்த பேனல்கள் பம்புடன் மின் இணைப்பாக இணைக்கப்படுகின்றன. கிணறு, குளம் மற்றும் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, பாசன குழாய்கள் வழியாக நிலத்திற்கு வழங்கலாம். இந்த அமைப்புகள் குறைந்த பராமரிப்புடன் நீண்ட காலம் செயல்படும் தன்மை கொண்டவை என்பது ப்ளஸ் பாயின்ட்.