* வியாசர்பாடி பேருந்து பணிமனையும் திறப்பு
சென்னை: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் சென்னையில் முதற்கட்டமாக 120 புதிய மின்சார பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு 500 மின்சார பேருந்துகள் வாங்க ஜெர்மன் வங்கி அளித்த நிதி உதவியுடன் டெண்டர் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 600 புதிய மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் அறிவிக்கப்பட்டன.
இதன் பின்னர் பிரபல தனியார் நிறுவனத்தின் ஒரு பகுதியான ஓ.எச்.எம். குளோபல் மொபிலிடி நிறுவனத்தின் மூலம் பேருந்து தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. தயாரான மின்சார பேருந்துகள் சோதனை முறையிலும் இயக்கப்பட்டன. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான பணிகள் என்பது நடைபெற்று முடிந்துள்ளன. இதில், சென்னை வியாசா்பாடி பணிமனையிலிருந்து மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான பராமரிப்புக் கூடம், அலுவலக நிா்வாக கட்டடம், பணியாளா் ஓய்வறை ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, புதிய மின்மாற்றிகள் பொருத்துதல் மற்றும் தீயணைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை நிறுவுதல் பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 208 கோடி மதிப்பீட்டில் 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடி பணிமனையில் இருந்து இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். அதேபோல், ரூ.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனைகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
* மின்சார பேருந்தின் வசதிகள்
யுபிஐ கட்டண வசதி, வழித்தட அமைப்புகளை தெரிவிப்பது போன்ற நவீன தொழில்நுட்பங்களால் இயங்கும் வகையில் வடிவமைப்பு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக பயணிக்க வசதி, வீணாக செல்லும் எண்ணெய் செலவையும் குறைத்து, சர்வதேச தரத்திலான ஊரக நகர போக்குவரத்து முறைமை உருவாக்குதல், சிசிடிவி கேமரா, கூடுதல் இருக்கைகள், தொலைபேசிகளுக்கு சார்ஜர் போடும் வசதியென புதிய வசதிகள் இந்த மின்சார பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.