நன்றி குங்குமம் தோழி
பொறியியல் பட்டப்படிப்பு, ஆசிரியராக எட்டு வருட வேலை. இடையில் திருமணம், குழந்தைகள், குடும்பம், பொறுப்பு. கணவரின் வேலை காரணமாக இந்தியா முழுக்க பயணம். தற்போது, தனக்கு பிடித்தமான சமையல் கலையை கொண்டு உணவகம் ஆரம்பித்து அதனை மிகவும் திறமையாக செயல்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த ஆதீஸ்வரி. ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் இவரின் ‘மில்லெட் மேஜிக்’ உணவகத்தின் இரண்டாவது கிளை அண்ணாநகரில் இயங்கி வருகிறது.
‘‘என் பூர்வீகம் திருநெல்வேலி. என் கணவருக்கு வேலை காரணமாக இந்தியா முழுக்க பயணம் செய்ய வேண்டும். அதனால் நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் முழு பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். எனக்கு சமையல் செய்வது ஒரு ஃபேஷன். புதுப்புது உணவுகளை சமைக்க கற்றுக் கொள்ள பிடிக்கும். என் கணவருடன் பயணம் செய்யும் போது, அந்த ஊரின் சிறப்பு உணவினை கற்றுக்கொள்வேன்.
அப்படித்தான் ஐதராபாத் போன போது, பிரியாணியும், கொல்கத்தாவில் ரசகுல்லாவும் செய்ய கற்றுக் கொண்டேன். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் வரை தான் அவர்களுக்கு நம்முடைய அட்டென்ஷன் தேவைப்படும். அவர்கள் வளர்ந்த பிறகு அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். அவர்கள் வளர்ந்த பிறகு எனக்கான நேரம் இருந்தது. அதுதான் என்னை ஒரு சிறிய அளவில் தொழில் துவங்க காரணமாக இருந்தது’’ என்றவருக்கு சிறுதானியம் மேல் ஏற்பட்ட மோகம் குறித்து விவரித்தார்.
‘‘சிறுதானியங்கள் மேல் எனக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் சாய்பாபாதான். ஒரு வேண்டுதலுக்காக அவருக்கு 48 நாட்கள் விரதம் இருந்தேன். அந்த சமயத்தில் அரிசி சாதத்தை விரதம் போது தவிர்த்து விடுவதாக வேண்டிக் கொண்டு இருந்தேன். அரிசிக்கு மாற்று பொதுவாக கோதுமைன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. எனக்கு அதைத் தவிர வேறு என்ன இருக்கும் என்று யோசித்த போது என் நண்பர்கள் சிறுதானியம் என்று ஐடியா கொடுத்தாங்க. சிறுதானியங்கள் நம் முன்னோர் காலத்தில் இருந்தே சாப்பிட்ட உணவு தான்.
காலப்போக்கில் நாம் அதை முற்றிலும் மறந்தேவிட்டோம். காரணம், சுவையால் நம் நாக்கினை துரித உணவுகள் கட்டிப் போட்டு வைத்திருந்தன. அந்த சமயத்தில் தான் சிறுதானியங்கள் மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடிக்க ஆரம்பித்து இருந்தது. சரி நானும் அதையே டிரை செய்யலாம்னு முடிவு செய்தேன். ஆனால் அவ்வளவு எளிதாக நாம் விரதத்தினை கடைபிடித்து விட முடியுமா? சில பல சோதனைகள் வரத்தான் செய்யும். எனக்கு சிறுதானியங்கள் மூலமாக வந்தது. முதலில் சிறுதானியங்களை மூன்று வேளை சாப்பிட வேண்டும். அடுத்து அரிசி சாதம் போல் எளிதாக சமைக்க முடியல. குக்கரில் வேக வைச்சா குழஞ்சிடும்.
சரி பானையில் வேக வச்சு வடிக்கலாம்ன்னு பார்த்தா கஞ்சி போல ஆயிடும். ரொம்பவே சிரமப்பட்டேன். என்ன செய்வதுன்னு திணறினேன். ஆனாலும், எனக்குள் ஒரு வைராக்கியம். எப்படியாவது இதனை சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்ன்னு முடிவு செய்தேன். ஒவ்வொரு நாளும் டிரையல் அண்ட் எரராகத்தான் சமைப்பேன். ஆனால் 48வது நாள் விரதம் முடிக்கும் முன் சிறுதானியத்தில் பல சுவையான உணவுகளை செய்ய கற்றுக் கொண்டேன். இட்லி, பொங்கல், தோசை, ஆப்பம், இடியாப்பம், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், தம் பிரியாணி என பல வகை உணவுகளை சுவையாக செய்ய பழகினேன். அதில் மிகவும் முக்கியமாக சிறுதானியங்களை உதிர் உதிராக வடிக்க கற்றுக் கொண்டேன்.
ஒரு மண்டலம் எனக்கு சிறுதானியங்கள் குறித்த சமையல் கலை மட்டுமில்லாமல் என் உடல் ஆரோக்கியத்திலும் பெரிய மாற்றத்தை கொடுத்தது. அப்போதுதான், இந்த உணவினை மற்றவர்களுக்கு சமைக்க கற்றுக் ெகாடுத்தால் என்ன என்று தோன்றியது. என் தோழியிடம் சொல்ல. நானும் அவளும் சேர்ந்து சிறுதானியங்கள் சமைப்பது குறித்து கற்றுக் கொடுக்க திட்டமிட்டோம். பத்து சுவையான சிறுதானிய உணவுகளுக்கான குக்கரி கிளாஸ் துவங்கினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் கற்றுக் கொண்ட என் மாணவிகள் தான் என்னை ஒரு உணவகம் ஆரம்பிக்க சொல்லி ஊக்குவித்தாங்க. அப்படித்தான் மில்லெட் மாஜிக் உருவானது’’ என்றவர் முதலில் ேடக் அவே முறையில்தான் இதனை துவங்கியுள்ளார்.
‘‘ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு பிடித்தேன். அங்கு சாப்பிட முடியாது என்பதால் டெலிவரி மட்டும் தான் கொடுத்தேன். உடன் வேலைக்காக மூன்று பெண்களை நியமித்தேன். அவர்கள் காய்கறி நறுக்குவது, பார்சல் கட்டுவது, சுத்தம் செய்ய மட்டும் தான் வைத்துக் கொண்டேன். சமையல் முழுதும் என்னுடைய கன்ட்ரோலில்தான் இருந்தது. முதலில் மதிய நேர உணவு மட்டும் தான் கொடுத்து வந்தோம். அதுவும் எக்சிக்யூடிவ் லஞ்ச் தான்.
தில் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், ஒரு வெரைட்டி சாதம், குழம்பு, துவையல், சப்பாத்தி, ராகி களி என கொடுத்தேன். இதில் ஒவ்வொரு நாளும் துவையல் மற்றும் வெரைட்டி சாதம் மாறுபடும். அதேபோல் ஒரு நாள் சப்பாத்தி இருக்கும். மறுநாள் ராகி களி இருக்கும். நல்ல வரவேற்பு கிடைச்சது. ஆரம்பத்தில் அருகில் இருக்கும் இடத்திற்கு நானே டெலிவரியும் செய்திருக்கேன். அதன் பிறகு டெலிவரிக்கு ஆட்கள் வைத்தேன். ஆனால் அது பிரச்னையானது. காரணம், ஒருவர் ஆழ்வார்பேட்டையில் இருப்பாங்க.
மற்றவர் அடையாரில் இருந்து ஆர்டர் கொடுப்பாங்க. இதனால் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் போனது. அந்த சமயத்தில் தான் உணவுகளை வழங்கும் ஆப்கள் அறிமுகமானது. அது என் உணவினை சென்னையில் பல இடங்களுக்கு எடுத்து சென்றது. இதற்கிடையில் அமர்ந்து சாப்பிட வாடிக்கையாளர்கள் விரும்பினார்கள். அதனால் 20 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் அளவிற்கு எங்களின் உணவகத்தை அமைத்தேன்.
முதலில் 8 உணவுகள் மட்டுமே கொடுத்து வந்தோம். இப்போது இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம், பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பீட்சா, சூப் மற்றும் ஸ்நாக்ஸ் வகையில் பீட்ரூட் முறுக்கு, ராகி லட்டு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி, மிக்சர், குக்கீஸ், பிரவுனி என சிறுதானியத்தில் மட்டுமே 400க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்குகிறோம். எங்களின் எந்த உணவிலும் மைதா, சோடா மாவு, அஜினோமோட்டோ நாங்க சேர்ப்பதில்லை.
இதில் எங்களின் சிக்னேச்சர் உணவு கறிவேப்பிலை மினி இட்லி. இட்லியை கறிவேப்பிலை பொடியில் பிரட்டி அதன் மேல் ஆலி விதை பொடியினை தூவிக் கொடுப்போம். உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் ஸ்நாக்ஸ் கேட்டதால், அதனையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்று பல டிரையல் செய்த பிறகு தான் அறிமுகம் செய்தோம். பிரவுனி மட்டும் 42 முறை டிரையல் செய்திருக்கிறோம். தற்போது மைசூர்பாக்கிற்கான டிரையல் நடந்து கொண்டிருக்கிறது. மத்தபடி கம்பு ஹல்வா, காஜு கத்லி, குலாப் ஜாமூன் என அனைத்து ஸ்வீட்ஸ் வெரைட்டியும் உண்டு.
என்னைப் பொறுத்தவரை ஆரோக்கியமான உணவினை மக்களுக்கு கொடுக்கணும். நம் முன்னோர்கள் சிறுதானியங்கள் சாப்பிட்டவர்கள்தான். பல துரித உணவுகள் வந்த பிறகு நாம் அதை சாப்பிடுவதை நிறுத்திட்டோம். எல்லோராலும் அந்த உணவினை சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. அதுவே ஒருவர் சமைத்து தரும் போது, அவர்களுக்கு சாப்பிட எளிதாக இருக்கிறது. மேலும் வீட்டில் செய்வது போல் அதன் சுவை மற்றும் தரம் இருப்பதால் பலர் விரும்பி சாப்பிட வராங்க.
ஆரோக்கியமானது மற்றும் உடல் எடை குறைப்பிற்கு நல்லது. தற்போது அண்ணாநகரில் இரண்டாவது கிளை துவங்கி இருக்கேன். அதனால் குக்கிங் பயிற்சி அளிக்க நேரமில்லை. ஆனால் வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள் என்னுடைய மில்லட் மேஜிக் யுடியூப் பார்த்து கற்றுக்ெகாள்ளலாம். அதில் எல்லா உணவுகளுக்கான செய்முறை உள்ளது. மில்லட் கேட்ரர்ஸ் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது.
கல்யாணம், காதுகுத்து போன்ற விழாக்களுக்கு கேட்டரிங் செய்ய வேண்டும். என் தோழி மூலமாக ஒரு திருமண ஆர்டர் வந்தது. அவர்கள் மூன்று வேளையும் கேட்டரிங் கேட்டாங்க. என்னிடம் இருக்கும் ஆட்களை வைத்து என்னால் மூன்று வேளையும் சமைக்க முடியாது. அதனால் இரவு மற்றும் காலை சிற்றுண்டிக்கு ஏதாவது ஒரு உணவு மட்டும் செய்து தருவதாக வாக்கு ெகாடுத்தோம். அதன் படி இரவு தினையில் புல்காவும், காலை வரகு வெண்பொங்கலும் செய்து கொடுத்தோம். கிட்டத்தட்ட 1000 பேருக்கான ஆர்டர் அது. அதன் பிறகு தான் எனக்கு கேட்டரிங்கிலும் தடம் பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு என தனி டீம் அமைத்த பிறகுதான் முழு மூச்சாக இறங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறேன்.
தொழிலைப் பொறுத்தவரை ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். அதற்காக துவண்டுவிடாமல் அடுத்து என்ன என்று யோசித்து பயணிக்க வேண்டும். என்னுடைய 47 வயசில்தான் பிசினசை கையில் எடுத்தேன். திறமையை அடையாளம் காட்ட வயது ஒரு தடை கிடையாது. அது ஒரு எண் அவ்வளவுதான். தேர்வு செய்த பாதையினை சரியாக கடந்தால்தான் நிர்ணயித்த இலக்கை ஜெயிக்க முடியும்’’ என்றார் ஆதீஸ்வரி.
தொகுப்பு: ஷம்ரிதி