சென்னை: பயணிகளை கவரும் வகையில் 50 மெட்ரோ ரயில் நிலைய நுழைவாயில் பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்களுடன் ஷாப்பிங் மால்கள் அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ.63,741 கோடி மதிப்பில் 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தொலைவுக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. 2ம் கட்ட திட்டத்தில், 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளுக்கு ரயில் சேவை வழங்குவது மட்டுமின்றி மாற்று வழிகளில் வருவாய் ஈட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது 50க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைத்து வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில் நிலைய நுழைவு பகுதிகளை இணைத்து வணிக பகுதிகளுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு பிரத்யேக வடிவமைப்புகளில் கட்டிடங்கள் அமைக்கப்படும். இந்த கட்டிடங்கள் தனியார் அலுவலகங்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், உணவகங்கள் நிறைந்த வளாகங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 50 மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு பகுதிகளில் இந்த வணிக வளாகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு செய்ய டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் வணிக வளாகங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்பு மெட்ரோ ரயில் நிலையத்துடன் வணிக வளாகங்கள் ஒன்றாக சேர்ந்து அமைக்கப்பட்டுள்ளது. இப்போது மெட்ரோ ரயில் நிலையத்தில் நுழைவு பகுதியில் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் அனைத்து சுரங்கம் மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றியும் வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தும். இவ்வாறு தெரிவித்தனர்.