திருவொற்றியூர்: எண்ணூர் விரைவு சாலையில், வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்ட 30 கன்டெய்னர் லாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. புனேவில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் பல்வேறு விதமான வெடி பொருட்களுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்கள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் போன்றவை தயாரிக்கப்பட்டு, அவற்றை கன்டெய்னர் பெட்டியில் அடைத்து டிரெய்லர் லாரிகள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து கப்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, புனேவில் இருந்து நேற்று வெடிபொருட்களுடன் வந்த 30 கன்டெய்னர் லாரிகள், எண்ணூர் விரைவு சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டன. வெடிபொருட்கள் என்பதால் இந்த கன்டெய்னர் பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
நீண்ட நேரமாக இந்த லாரிகள் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்ததுடன், போலீசார் குவிக்கப்பட்டதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்க குவிந்தனர். கன்டெய்னரில் வெடி பொருட்கள் இருப்பதாகவும், உடனே இங்கிருந்து கலைந்து செல்லும்படியும் போலீசார் அவர்களை எச்சரித்தனர். வெடிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் போதிய பாதுகாப்புடன் கன்டெய்னர் பெட்டியில் அடைக்கப்பட்டிருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. யாரும் அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்புக்காக வந்த சரக்கு பெட்டக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு, அனைத்து கன்டெய்னர் லாரிகளும் அங்கிருந்து துறைமுகம் சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.